செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8627e5bf-9022-4df6-a9a0-f2d6371c02f3
-

ஆர்ப்பாட்டக்காரரைப் பொதுவெளியில்

தூக்கிலிட்ட ஈரான் அரசாங்கம்

டெஹ்ரான்: ஈரானைக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக உலுக்கியுள்ள ஆர்ப்பாட்டங்களின் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் இரண்டாவது ஆடவரைத் தூக்கிலிட்டுள்ளது.

காவல்துறையைச் சேர்ந்த இருவரைக் கத்தியால் குத்திக் கொன்றதற்காகவும் நால்வரைக் காயப்படுத்தியதற்காகவும் மஜீத்ரெஸா ரஹ்னாவார்ட் என்ற அந்நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அந்நபர் சிறைச்சாலையில் இல்லாமல் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

ஈரானிய அரசாங்கம் ஏற்கெனவே 23 வயது ஆடவர் ஒருவரை ஆர்ப்பாட்டங்களின் தொடர்பில் தூக்கிலிட்டதை பல உலக நாடுகள் கண்டித்திருந்தன.

வரும் நாள்களில் மேலும் சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன.

பிலிப்பீன்ஸ் அரசாங்க முதலீட்டு நிறுவனத் திட்டத்துக்கு எதிர்ப்பு

மணிலா: பிலிப்பீன்சில் பல பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தை அமைக்கும் திட்டத்தை பிலிப்பீன்ஸ் அதிபர் தற்காத்துப் பேசியுள்ளார்.

மஹர்லிகா முதலீட்டு நிதியை 275 பில்லியன் பெசோ (S$6.7 பில்லியன்) செலவில் அமைக்கும் மசோதா பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகச் செலவுள்ள தேசிய திட்டங்களில் அதன்வழி முதலீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதற்காக பிலிப்பீன்ஸ் மக்களின் ஓய்வுக்கால நிதியிலிருந்து பணத்தைப் பயன்படுத்துவது, அதிபரை நிதி நிறுவனத்தின் தலைவராக நியமிப்பது போன்ற திட்டங்கள் குறைகூறப்பட்டுள்ளன. அது லஞ்ச ஊழலுக்கு வழிவிடும் என்று திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறியுள்ளனர்.

அது பற்றி கருத்துக் கூறாதிருந்த அதிபர் மார்கோஸ் ஃபெர்டினான்ட் ஜூனியர், அந்நிறுவனம் பிலிப்பீன்சுக்கு பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றார்.

கோலாலம்பூர் செல்லும் விமானச் சேவைகள்; நேரம் மிச்சப்படலாம்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டு முனையங்களிலும் அடுத்த ஆண்டு சென்று இறங்கும் பயணிகளுக்கு 18 முதல் 22 நிமிடங்கள் மிச்சப்படலாம்.

இரண்டு முனையங்களிலும் விமானங்கள் விரைவாக வந்து இறங்க உதவும் புதிய கட்டமைப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நேற்று கூறினார். அடுத்த ஆண்டு மே 18ஆம் தேதி அந்தக் கட்டமைப்புகள் செயல்படத் தொடங்கும் என்று திரு லோக் கூறினார்.

விமானங்கள் முனையங்களைச் சுற்றி வட்டமிடும் நேரத்தைக் குறைத்து சீக்கிரம் தரையிறங்க உதவும் நோக்கில் தரையிறங்கும் பாதையின் நீளம் குறைக்கப்படும் என்று திரு லோக் தெரிவித்தார்.