செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
96e013b3-86b5-4f43-8e18-ea0a09c00d93
-

பாலி குண்டுவெடிப்பு: வெடிகுண்டைத் தயாரித்தவர் மன்னிப்பு கேட்டார்

லாமோங்கான்: பாலியில் 2002ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் வெடிகுண்டைத் தயாரித்தவர் தன் செயலுக்காக நேற்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

உமார் பாட்டெக் எனும் அந்நபர் சிறைத்தண்டனையில் பாதி எஞ்சியிருக்கும் நிலையில் கடந்த வாரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரது விடுதலை ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் தாக்குதலில்களில் உயிர் தப்பித்தவர்களுக்கும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பாலித் தீவில் உள்ள மதுபானக் கூடம், இரவுநேர கேளிக்கை விடுதி ஆகியவற்றில் நடந்த தாக்குதல்களில் 202 பேர் மாண்டனர். அவர்களில் பலர் ஆஸ்திரேலியர்கள்.

தாக்குதல்களை நடத்திய ஜமா இஸ்லாமியா அமைப்பில் சேர்ந்திருந்த உமார், வெடிகுண்டுகளைத் தயாரித்தார்.

அதற்காக வாழ்நாள் முழுவதும் மன்னிப்புக் கேட்க கடமைப்பட்டுள்ளதாகவும் இந்தோனீசியாவுக்கு தமது விசுவாசத்தைக் காட்டப் போவதாகவும் உமார் கூறினார்.

பாகாங் சாலையில் முதலை

குவாந்தான்: மலேசியாவின் பாகாங் மாநிலத்தின் குவாந்தான் நகரில் வெள்ளநீர் ஓடிய சாலையில் பெரிய முதலை ஒன்று சாலையில் தென்பட்டதால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது.

கம்போங் செரி டாமாய் எனும் ஊரில் கடந்த திங்கட்கிழமை மாலை முதலை கண்ணில் தென்பட்டது. ஊர்க்காரர் ஒருவர் அதைக் காணொளி எடுத்தார்.

புலாவ் மானிஸ் சட்டசபை உறுப்பினர் முகமது ரஃபிக் கான் அகமது கான், 29 வினாடி நீடித்த அந்தக் காணொளியை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.

அப்பகுதி முதலைகள் வாழுமிடம் என்ற அவர், மழை பெய்து ஆறு கரைபுரண்டோடும் போதெல்லாம் முதலைகள் உலவத் தொடங்குவதாக திரு ரஃபிக் நேற்று கூறினார்.

முதலை சாலையில் உலவுவதை அங்குள்ள மக்கள் படம் பிடித்திருப்பது இதுவே முதல் முறை என்றார் அவர்.

மின்னிலக்க நாணய நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

வாஷிங்டன்: எஃப்டிஎக்ஸ் (FTX) எனப்படும் மின்னிலக்க நாணயச் சொத்துப் பரிமாற்ற நிறுவனத்தின் இணை நிறுவனரும் அதன் முன்னாள் தலைவருமான சாம் பேங்க்மேன்-ஃபிரைட் (படம்) கடந்த திங்கட்கிழமை அன்று பஹாமா தீவுகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக அவர்மீது அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ததை அடுத்து அவர் கைதாகியுள்ளார்.

பேங்க்மேன்-ஃபிரைட் பஹாமா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிவேகமாக வளர்ந்துவரும் மின்னிலக்க நாணயத் துறையில் எஃப்டிஎக்ஸ் (FTX) முன்னணி வகித்து வந்தது.

ஆனால் அதன் கணக்குகளில் எட்டு பில்லியன் டாலர் குறைவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நிறுவனம் சட்டென்று சரிந்தது. திரு சாம்பேங்க்மேன்-ஃபிரைட்டும் அவரது சகாக்களும் ஊரைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

நியூசிலாந்தில் இளம் தலைமுறையினர் புகைப் பிடிக்கத் தடை

ஆக்லாந்து: நியூசிலாந்தின் வருங்காலத் தலைமுறைகள் புகையிலைப் பொருள்களை வாங்குவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. புகைப் பிடிப்பதற்கு எதிரான அந்நாட்டின் புதிய சட்டங்களில் அதுவும் ஒன்றாகும்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின் பிறந்த எவருக்கும் புகையிலைப் பொருள்களை விற்பதும் நியூசிலாந்தில் குற்றமாக மாறும். வருங்காலத் தலைமுறையினரின் வாழ்நாள் முழுவதும் அது நடப்பில் இருக்கும். சட்டத்தை மீறுவோருக்கு NZ$150,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், புதிய சட்டம் புகையிலைப் பொருள்களை விற்கும் கடைகளை 90 விழுக்காடு குறைப்பதுடன் புகையிலைப் பொருள்களில் உள்ள நிக்கோட்டின் அளவைக் கட்டுப்படுத்தும். அதன்வழி, புகைப்பிடித்தலுக்கு எதிரான கடும் சட்டங்களை இயற்றிய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்றாக இருக்கும்.