ஹாங்காங்: ஹாங்காங் செல்லும் அனைத்துலகப் பயணிகள் மீதான நடமாட்டக் கட்டுப்பாடுகளும் அவர்கள் மதுபானக் கூடங்கள் அல்லது உணவகங்கள் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கும் விதிக்கப்பட்ட தடைகளும் அகற்றப்படவுள்ளன.
பொது இடங்களில் நுழைய அரசாங்கத்தின் கொவிட்-19 செயலியைப் பயன்படுத்த இனி தேவையில்லை. அந்தத் தளர்வுகள் இன்று 14ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ நேற்று அறிவித்தார்.
ஆனால் தடுப்பூசி சான்றிதழைக் காட்டினால்தான் சில இடங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்று திரு லீ கூறினார்.
உலகின் முக்கிய நிதி மையங்களில் ஒன்றான ஹாங்காங், தனது கிருமித் தொற்றுக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை மட்டும் தளர்த்தி இருந்தது. அதனால் ஹாங்காங் பொருளியல் தொய்வடைந்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் பயணங்களும் வர்த்தகமும் அதனால் பொருளியலும் மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனா தொடர்ந்து கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் என்றும் விரைவில் அதிகமான வெளிநாட்டவர் அங்கு நுழைய அனுமதிக்கப் படுவர் என்றும் அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சின் காங் கூறியுள்ளார்.

