பெய்ஜிங்: சீனா, தனது நாட்டிலிருந்து கொவிட்-19 தொற்றுக்கிருமியை முற்றிலும் ஒழித்துக்கட்டும் கொள்கையைப் பின்பற்றி கடுமையானக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. ஆனால் மக்கள் எதிர்ப்பு கிளம்பியதால் அதிலிருந்து பின்வாங்கிய அரசாங்கம் பல தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அரசாங்க நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மக்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
நவம்பர் மாதத்திற்கான முக்கிய பொருளியல் குறியீடுகளை வெளியிடும் மாதாந்திர செய்தியாளர் கூட்டம் இன்று நடைபெறு வதாக இருந்தது. அதுவும் ரத்து செய்யப் படுவதாக நேற்று தேசிய புள்ளியியல் பிரிவு தெரிவித்தது.
மத்திய பொருளியல் குழுவின் கூட்டத்தில் வரும் ஆண்டுக்கான பொருளியல் இலக்குகளை அதிகாரிகள் வெளியிடுவது வழக்கம்.
மேலும் முதியோர்களில் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுள்ள நிலையில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாகத் தளர்த்தியிருக்கிறது.
இதனால் பொருளியல் பாதிக்கபடக் கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. 'காய்ச்சல்' என்ற வார்த்தையை இணையத்தில் பலர் தேடியிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன. சுரங்கப்பாதை பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இதை வைத்துப் பார்க்கும்போது தலை நகர் பெய்ஜிங்கில் கிருமிப்பரவல் மோசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பெய்ஜிங்கில் பல ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் மூடி கிடக்கின்றன. சாலைகளில் ஸ்கூட்டரில் பறந்து செல்லும் உணவு விநியோகிப்பாளர்கள் ஏறக்குறைய காணாமல் போயுள்ளனர்.
மருந்துக் கடைகளில் சளிக்காய்ச்சல் மருந்து தீர்ந்துவிட்டது. பேரங்காடிகளில் கிருமித் தெளிப்பான் போன்ற அத்தியாவசியமான பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
"யாருக்கும் வெளியே வர மன தைரியமில்லை," என்று பெய்ஜிங் உணவக உரிமையாளரான யுவே ஜியாஜன் தெரிவித்தார்.
கடந்த வாரம் உட்புறங்களில் உணவு உண்ண வாடிக்கையாளர் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வருவார்கள் என இவர் கொண்டாடி மகிழ்ந்தார். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் வெளியே வராமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்;
"உணவைப் பொட்டலாமாக வாங்கிச் செல்லக்கூட ஆளில்லை" என்று திரு யுவே தெரிவித்தார். வெய்போ சமூக ஊடகத்தில் தன்னுடைய உறவினர், நண்பர்களில் 50 முதல் 60 விழுக்காட்டினருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
பெய்ஜிங்கில் மட்டும் 559 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

