வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கை
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் நிறுவனம் தனது நிறுவனத்தில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அதன் ஊழியர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் தனது வர்த்தகத்தில் செய்திப்பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் புதிதாக சில மாற்றங்களைச் செய்யவுள்ளதாகவும் அதன் காரணமாக சில பணியிடங்களை அகற்றப்போவதாகவும் அறிவித்துள்ளது. ஆனால் ஆள்குறைப்பு ஓரிலக்க எண் விழுக்காட்டில்தான் இருக்கும் என்றும் இருப்பினும் புதிதாக உருவாக்கப்படும் பிரிவுகளுக்கு ஆள் சேர்க்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் செய்திப்பிரிவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
சீனாவில் தொற்று அதிகரிப்பு:
முதியவர்களைக் காக்க நடவடிக்கை
பெய்ஜிங்: சீனாவில் கொவிட்-19 தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்நிலையில், முதியவர்களை தொற்றுப் பாதிப்பில் இருந்து காக்க அந்நாட்டு அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அவ்வகையில் பெய்ஜிங், ஷாங்காய், நாஞ்சிங் ஆகிய பகுதிகளில் முதியவர்கள் வசிக்கும் பராமரிப்பு இல்லங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் யாரும் பராமரிப்பு இல்லங்களுக்குள் நுழையவோ அங்கிருந்து வெளியேறவோ முடியாது.
பெரு நாட்டில் தவிக்கும்
சுற்றுலாப் பயணிகள்
லிமா: பெரு நாட்டின் முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டில்லோ கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பெரு நாட்டில் பெரியளவில் போராட்டம் வெடித்துள்ளது. அதன் காரணமாக பெருவின் முக்கிய சுற்றுலாத்தலமான மச்சு பிச்சு வட்டாரத்தில் ரயில், போக்குவரத்துச் சேவைகள் முடங்கின. அப்பகுதியில் தங்கியிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கிட்டத்தட்ட 800 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய அதிபர் டினா பொலுவாரெட்டுக்கு எதிராக நடந்துவரும் இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டதாகவும் 200 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

