லண்டன்: பிரிட்டனில் தேசிய சுகாதாரச் சேவைத் துறையைச் சேர்ந்த தாதியர்கள் முதன்முதலாக தேசிய அளவில் மாபெரும் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். 106 ஆண்டுகளில் இல்லாதவகையில் இந்தப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அரசாங்கத்துடனான கசப்புணர்வு மற்றும் ஊதியம் ஆகிய பிரச்சினைகளே இந்தப் போராட்டம் வெடிக்கக்காரணம். ஏற்கெனவே நோயாளிகளை சரிவரக் கவனிக்க முடியாத நெருக்கடியை மருத்துவமனைகள் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டின் பரபரப்பான இக்காலகட்டத்தில் தாதியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் நோயாளிகளைக் கவனிப்பதில் மருத்துவமனைகள் மேலும் சிரமங்களை எதிர்நோக்குகின்றன.
அங்குள்ள 76 தேசிய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் இருந்து கிட்டத்தட்ட 100,000 தாதியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிகிச்சைக்காக வரவிருந்த ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளின் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஏராளமான அறுவை சிகிச்சைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டனில் அண்மையில் அரங்கேறி வரும் வேலை நிறுத்தங்களால் தொழிற்சாலை, அஞ்சலகத்துறை, ரயில்வே துறை, விமானத்துறை என பலதுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வேளையில் தாதியர்களின் வேலை நிறுத்தம் அரசாங்கத்தை மேலும் இக்கட்டில் தள்ளியுள்ளது.
பிரிட்டனில் பணவீக்கம் 10 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. அதனால் ஊழியர்களுக்கு அதிக ஊதிய உயர்வு அளிக்க முடியாமல் தொழில்துறைகளும் அரசாங்கத்துறைகளும் திணறி வருகின்றன. இது அங்குள்ள தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் போராட்டங்கள் பல வெடித்தாலும் இப்போது வெடித்துள்ள தாதியர்கள் போராட்டமே அங்கு பெரியளவில் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.
"தொழிற்சங்க ஊழியர்கள் இதுபோன்ற வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவது ஆழ்ந்த கவலையைத் தருகிறது. பணியாளர்களின் தேவையை உறுதிசெய்ய நான் பொதுத்துறையினரிடமும் தனியார் மருத்துவர்களிடமும் இணைந்து பணியாற்றி வருகிறேன். அதேநேரத்தில் தாதியர்களின் வேலை நிறுத்தத்தில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்று கவலைப்படுகிறேன்.
"அவசர மருத்துவ சிகிச்சைக்கான நோயாளிகளும் முக்கியமான சிகிச்சைகளுக்கு முன்பதிவு செய்தவர்களும் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறலாம்," என்று அமைச்சர் ஸ்டீவ் தெரிவித்தார். பாதுகாப்பற்ற நிலையிலான நோயாளிக் கவனிப்பு, ஊழியர் பற்றாக்குறை, குறைந்த ஊதியம் ஆகியவற்றால் தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு 19 விழுக்காடு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பதற்காக தாதியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசாங்கமோ சம்பள உயர்வைப் பற்றிப் பேச மறுத்துவருகிறது.
தாதியர்களுக்கு நான்கு முதல் ஐந்து விழுக்காட்டுக்கு மேல் சம்பள உயர்வு அளிப்பது சாத்தியமல்ல என்று அரசாங்கம் கூறிவருகிறது. தாதியர் போராட்டத்திற்கு முந்தைய கருத்துக்கணிப்பில் அதிகமானோர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

