மணிலா: இம்மாதம் தென்சீனக் கடலில் சீனக் கப்பல்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிலிப்பீன்ஸ் சீனாவுக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு சில வாரங்கள் முன்னர் தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பீன்ஸ் கடற் படைக்கும் சீன கடலோரக் காவல் படைக் கப்பல்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கும் 6ஆம் தேதிக்கும் இடையே சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் பிலிப்பீன்ஸ் நாட்டின் கண்டனம் எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சீனா, அமெரிக்காவுக்கு இடையே தென்சீனக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த போட்டி வலுத்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையே கவனமாக நடுநிலைப் போக்கை திரு மார்க்கோஸ் கடைப்பிடித்து வருவதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
இரோகொய் பாறைப் பகுதி, சபினா மண் திட்டுப் பகுதி போன்ற இடங்களைச் சுற்றி சீன துணை ராணுவப் படகுகள் குவிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிலிப்பீன்ஸ் நாட்டு தேசிய தற்காப்புத் துறையின் மூத்த துணை செயலாளர் ஹோசெ ஃபவுஸ்டினோ கூறினார்.
இந்தப் பகுதிகள் யாவும் தென்சீனக் கடலில் சர்ச்சைக்கு உண்டான ஸ்பராட்லி தீபகற்பப் பகுதியில் உள்ளவை.
இவை பிலிப்பீன்ஸ் நாட்டுக்குச் சொந்தமான பொருளியல் வட்டாரத்துக்கு உட்பட்டவை என்று கூறப்படுகிறது.
இந்தப் பகுதியை பிலிப்பீன்ஸ் நாட்டின் மேற்குக் கடல் பகுதி என்று குறிப்பிடுகிறது. இதில் ஒரு துளி நிலப்பகுதியைக்கூட பிலிப்பீன்ஸ் விட்டுக் கொடுக்காது என்று திரு ஃபவுஸ்டினோ கூறினார்.
இதன் தொடர்பில் கடந்த 2016ஆம் ஆண்டு, நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அனைத்துலக சமரச தீர்ப்பாயம் தென்சீனக் கடலின் பெரும்பகுதி தன்னுடையது என்ற சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது.
அத்துடன், பிலிப்பீன்சின் பொருளியல் மண்டலத்திற்கு உட்பட்டிருக்கும் இந்தப் பகுதி பிலிப்பீன்ஸ் நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் அது விளக்கியது. ஆனால், இந்தத் தீர்ப்பை சீனா ஏற்க மறுக்கிறது.
பிலிப்பீன்சில் கட்டுப்பாட்டில் உள்ள கடல்பகுதியில் சீனக் கப்பல்களும் படகுகளும் புழங்கும் படம் காணொளி ஒன்றை அந்த நாட்டின் தொலைக்காட்சி ஜிஎம்-7 நேற்று முன்தினம் ஒளிபரப்பியது.