கோலாலம்பூர்: மலேசியாவில் பிரதமர் அன்வாரின் ஐக்கிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் அவருடைய அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடும். இதை மலேசிய துணைப் பிரதமர் ஃபடில்லா யூசூஃப் தெரிவித்தார்.
இது, திங்கள்கிழமை திரு அன்வார் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு முன்னதாக நடைபெறும் என்று பெரித்தா ஹரியான் செய்தித்தாள் கூறியது.
"இது குறித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் நான் கலந்தாலோசித்து விட்டேன். அத்துடன், ஒப்பந்தத்தின் முழுவிவரம் பற்றித் தெரிந்துகொள்ள நான் கபுங்கான் சரவாக் கட்சியைச் சந்தித்துப் பேச உள்ளேன்," என்று திரு ஃபடில்லா விளக்கினார்.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பர் என்று கபுங்கான் சரவாக் கட்சியின் தலைமைக் கொறடா சொன்னார்.
முன்னதாக, ஐக்கிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்துக் கட்சிகளும், திரு அன்வாரின் ஐக்கிய அரசாங்கத்துக்கு வலுசேர்க்கும் முயற்சியாக இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுவதாக வாரிசான் கட்சித் தலைவர் முகம்மது ஷஃபி அப்தால் கூறினார்.
அந்த நிகழ்வில் அன்வாருக்கு ஆதரவளிக்க வாரிசான் கட்சி எடுத்துள்ள முடிவின்படி தான் பங்கேற்கவுள்ளதாக திரு ஷஃபி தெளிவுபடுத்தினார்.
"இன்று வெள்ளிக்கிழமையன்று பக்கத்தான் ஹரப்பான் கட்சியும் மற்ற கட்சிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏதுவாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் நான் பங்கேற்பேன்.
"இதுதான் எங்களது முன்னுரிமை, அரசியல் செய்வதை குறைப்பது.
"இதில் முக்கியமானது என்னவெனில், சரியானவற்றை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே," என்று அவர் தெரிவித்தார்.

