கோலாலம்பூர்: மலேசியாவில் அரசாங்கம் சார்ந்த நிறுவனங்கள், சட்டபூர்வ அமைப்புகள், வாரியங்கள், மாநில முதலீட்டு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களையும் அவற்றின் உறுப்பினர்களையும் பிரதமர் அன்வார் இப்ராகிம் நிர்வாகம் நீக்கியுள்ளது.
இந்தத் தகவலை மத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர், 'மலே மெயில்' இணைய இதழிடம் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இது அக்கூட்டணி, தனது ஆதரவுக் கட்சிகளின் வெறுப்பை சம்பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அரசாங்கம் சார்ந்த அமைப்புகளில் இயக்குநர் மற்றும் தலைவர் பதவிகள் பெரும்பாலும் அரசியல் ரீதியாக விசுவாசத்தின் அடிப்படையில் அளிக்கப்படும். இது பெரும்பாலும் பாரிசான் நேஷனல் ஆட்சியின் நீண்டகால கலாசாரமாக இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான உள்ளூர் சிந்தனைக் குழுமம் முன்பு அரசியல் ரீதியாக நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. 2021 ஆகஸ்ட் முதல் 2022 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 230 பேர் இதுபோன்ற பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.

