அரசாங்கம், இதர மூவருக்கு மலேசிய உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 2006ஆம் ஆண்டில் அல்டான்டுயா ஷரிபு என்ற மங்கோலியாவைச் சேர்ந்த விளம்பர அழகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 5 மில்லியன் ரிங்கிட் (S$1.53 மில்லியன்) கொடுக்கும்படி மலேசிய அரசாங்கத்திற்கும் இதர மூன்று பேருக்கும் மலேசிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
அரசாங்கத்திற்கும் அரசியல் பகுப்பாய்வாளர் அப்துல் ரசாக் பகிந்தா, முன்னாள் காவல்துறை அதிகாரிகளான சைருல் அஸார் உமர், அஸிலா ஹாட்ரி ஆகிய மூன்று பேருக்கும் எதிராக அந்த அழகியின் குடும்பத்தினர் வெற்றி கரமான முறையில் தங்களுடைய சாட்சியங்களை மெய்ப்பித்து இருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி வாஸிர் அலாம் மைதீன் மீரா நேற்று தீர்ப்பளித்தார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 2007ல் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 15 ஆண்டுகள் கழித்து இப்போது தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
இழப்பீட்டு வழக்கு விசாரணை 2019ல் தொடங்கியது. வாதித் தரப்பில் மொத்தம் 26 பேர் சாட்சியம் அளித்தனர். அரசு சார்பில் மூன்று சாட்சிகள் முன்னிலையானார்கள். அப்துல் ரசாக் சாட்சியம் அளிக்க மறுத்துவிட்டார்.
மங்கோலிய அழகி 2006 அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் ராணுவம் பயன்படுத்தக்கூடிய அளவிலான வெடிமருந்துகளைக் கொண்டு தகர்க்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகளான சைருல் அஸார் உமர், அஸிலா ஹாட்ரி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு 2009ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மலேசியாவில் நஜிப் ரசாக் துணைப் பிரதமராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக அப்துல் ரசாக் என்பவர் இருந்தார். இவர் அந்தக் கொலையில் குற்றவாளிகள் இருவருக்கும் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சுமத்தப் பட்டது. ஆனால், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
அந்த அழகியின் பெற்றோரும் அவர்களின் பேரப்பிள்ளைகள் மூன்று பேரும் இழப்பீடு கேட்டு 2007 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி விண்ணப்பித்து இருந்தனர்.
பிறகு பேரப்பிள்ளைகளில் ஒருவர் 2017ல் மரண மடைந்தவிட்டதால் வாதிகளின் பெயர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது.