வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற மேலவை வியாழக்கிழமை சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. சாதனை அளவாக ஆண்டுக்கு US$858 பில்லியன் (S$1.16 டிரில்லியன்) தொகையைத் தற்காப்புக்குச் செலவிட அந்தச் சட்டம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தேசித்து இருந்த அளவைவிட இந்தத் தொகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
'தேசிய தற்காப்பு அங்கீகாரச் சட்டம்' என்ற அந்தச் சட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 83க்கு 11 என்ற அளவில் பெரும்பான்மையுடன் ஆதரித்து வாக்களித்தனர்.
புதிய சட்டம், அமெரிக்க தற்காப்பு அமைச்சுக்கான கொள்கைகளை வரையறுக்க வழிவகை செய்கிறது.
அந்தச் சட்டத்தை ஏற்கெனவே நாடாளுமன்றக் கீழவை நிறைவேற்றி இருக்கிறது. புதிய சட்டம் வெள்ளை மாளிகையில் தாக்கல் செய்யப்படும். அதில் உடனடியாக அதிபர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் நிறைவேற்றிஉள்ள புதிய சட்டம், 2023 நிதி ஆண்டில் ராணுவச் செலவினத்திற்காக US$858 பில்லியன் செலவிட அங்கீகாரம் அளிக்கிறது.
இதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு 4.6 விழுக்காட்டு சம்பள உயர்வு கிடைக்கும். ஆயுதங்கள், கப்பல்கள், விமானங்கள் கொள்முதல் செய்ய அந்தத் தொகை பயன்படுத்தப்படும்.
தைவானுக்கும் உக்ரேனுக்கும் ஆதரவு அளிக்கவும் அந்தத் தொகையில் ஒரு பகுதி செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தச் சட்டத்தை 1961 முதல் ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

