செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
93384307-dc99-45b2-b0e1-d88031eb8845
-

சீனா-ஹாங்காங் எல்லை திறப்பு

ஹாங்காங்: சீனப் பெருநிலம், ஹாங்காங் இரண்டிற்கும் இடைப்பட்ட எல்லை கடந்த மூன்றாண்டுகளில் முதன்முறையாக அடுத்த மாதத் தொடக்கத்தில் முற்றிலும் திறந்துவிடப்படும் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் தெரிவித்து இருக்கிறது.

இதற்கான ஆயத்த வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொருளியலை முட்டுக் கொடுக்கும் வகையில் சீனா கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது. இந்த நிலையில், சீனா-ஹாங்காங் எல்லை திறக்கப்படுகிறது.

இவர்தான் உலகிலேயே குள்ள மனிதர்

ஈரானின் மேற்கு அசர்பைஜான் மாநிலத்தில் புக்கான் என்ற வட்டாரத்தில் வசிக்கும் ஆஃஷின் இஸ்மாயில் காதர்ஜடா என்ற இந்த ஆடவர்தான் உலகிலேயே ஆக குள்ளமானவர் என்று உலக கின்னஸ் சாதனை புத்தகம் கூறுகிறது. இவர் 65.24 செ.மீ. உயரம் உள்ளவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. படம்: யூடியூப்/கின்னஸ்

ஐந்து ராணுவ வீரர்கள் நீக்கம்

தோக்கியோ: ஜப்பானில் ஐந்து படைவீரர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வீரர்களின் முன்னாள் சக பெண் வீரர்கள் தெரிவித்த பாலியல் புகார்களின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ராணுவ வீராங்கனையான ரினா கோனாய், 23, என்பவர் பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். கடந்த 2021ல் ஒரு பயிற்சியின் போது தன்னுடைய ஆண் சகாக்கள் தன்னை பாலியல் ரீதியில் தாக்கியதாக அவர் தெரிவித்து இருந்தார்.

அந்த மாது தாக்கல் செய்த புகாரில் புலன்விசாரணை தேவை என்று கேட்டு 100,000க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு இருந்தனர். அந்தச் சம்பவத்துக்காக ராணுவம் அந்த மாதிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த விவகாரம் தொடர்பில் வேறு ஓர் அதிகாரியும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் வெறிச்சோடிய கடைகள்

லண்டன்: லண்டனில் ரயில்வே ஊழியர்கள் அதிக சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவதால் மதுபானக் கூடங்களும் உணவகங்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

தலைநகரில் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக அலுவலகப் பயனீட்டு விகிதம் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தது. ஆனால் அது ஏறக்குறைய 20% ஆகக் குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனில் ஈரிலக்க பணவீக்கம் நிலவுகிறது. இந்த நிலையில், தங்களுக்குச் சம்பள உயர்வு தேவை என்று ரயில்வே ஊழியர்கள் போராடுகிறார்கள்.