கியவ்: உக்ரேன் முழுவதும் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை இடைவிடாமல் நடத்தியது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக் கொண்டார்கள். உக்ரேனின் கிழக்கு வட்டாரமான கார்கிவ்வும் கருங்கடல் வட்டாரமான ஒடெசாவும் மேற்கு மத்திய உக்ரேன் பகுதியும் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடிப்படை வசதிகள் அழிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
கார்கிவ், கியவ் நகர்களில் பல இடங்களிலும் மின்சாரம் தடை பட்டது. வடக்கு சுமெய் வட்டாரத்திலும் மின்சாரம் இல்லை என்று அவர்கள் கூறினர்.
ரஷ்யா உக்ரேனை பெருமளவு தாக்குகிறது என்று கியவ் வட்டார ஆளுநர் குலோபா தெரிவித்தார்.
இதனிடையே, உக்ரேன் படைஎடுப்பை நீண்ட நெடுங்காலத்திற்கு இழுத்தடிக்க ரஷ்யா முயல்கிறது என்றும் உக்ரேன் முழுவதையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ரஷ்யா விரும்புகிறது என்றும் அந்த நாடு தெரிவித்து இருக்கிறது.
உக்ரேனின் கியவ் நகரைத் தாக்குவதற்காக 200,000 வீரர்களை ரஷ்யா தயார்ப்படுத்துவதாகவும் உக்ரேன் கூறுகிறது.
அதேவேளையில், ரஷ்யா மீது மேலும் பல தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்தது.
உக்ரேனுக்கு 18 பில்லியன் யூரோ நிதி உதவியையும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்து இருக்கிறது.

