பாகோ: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறுவதுபோல மூன்றில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருந்தால் ஐக்கிய அரசாங்கத்துக்கான தேவையே இல்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
பதவி பறிக்கப்படும் அபாயம் ஏதும் இல்லாமல் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக முன்வைக்கக்கூடிய உரிமையும் நிலையும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
பல கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்துக்குத் தலைமை வகித்து அன்வார் பிரதமர் பதவி வகித்து வருகிறார். அவருக்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய நாளை மலேசிய நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
"நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதை நிரூபிப்பதில் அன்வாருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை எனத் தோன்றுகிறது.
"அவருக்கு 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்
களுக்கும் அதிகம்.
"தம்மை ஆதரிப்பவர்களை அன்வார் நம்ப வேண்டும். தேவையில்லா நிபந்தனைகளால் அவர்களுக்கு நெருக்குதல் தரக்கூடாது.
"அன்வாரைப் பிரதமராக ஏற்காமல் அவருக்கு ஆதரவு தராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று முன்வைக்கப்படும் நிபந்தனை அரசமைப்புச் சட்டத்தக்கு எதிரானது.
இத்தகைய சட்டங்கள் குறித்து நான் கேள்விப்பட்டதே இல்லை. கட்சி தாவுவதற்கு எதிரான சட்டமாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் இது கட்சி தாவுவதற்கு எதிரான சட்டத்துடன் தொடர்புடையதல்ல," என்று தமது தொகுதி யான பாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திரு முகைதீன் தெரிவித்தார்.
திரு அன்வார் போடும் இத்
தகைய உடன்பாடுகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் சட்டவிரோதமானது என்றும் சிலர் கருதுவதாக திரு முகைதீன் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகச் சொல்வதற்குப் பதிலாக ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
இதற்கிடையே, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி இன்று கலந்துரையாடி முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அன்வாருக்கு ஆதரவு தரப்போவதில்லை என்பதில் பெரிக்காத்தான் நேஷனல் உறுதியாக இருப்பதாக திரு முகைதீன் கூறினார். இருப்பினும், இதுகுறித்து தீவிரமாகக் கலந்துரையாடப்படும் என்றார் அவர்.
மலேசியாவின் ஐக்கிய அரசாங்கத்தில் பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி, கபுங்கான் சரவாக் கட்சி, கபுங்கான் சரவாக் மக்கள் கட்சி, வாரிசான் கட்சி ஆகியவை இடம்பெறுகின்றன.
நிலைத்தன்மைமிக்க தலைமைத்துவத்தை உறுதி செய்ய இவை உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. எவ்வித நிலையற்றதன்மையும் இன்றி ஐந்து ஆண்டுகளுக்குப் பிரதமர் பதவி வகித்து தமது பணிகளைச் செய்து முடிக்க இந்த ஏற்பாடு வழிவகுக்கும் என்று திரு அன்வார் தெரிவித்துள்ளார்.

