மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்ட 1.8 மி. சிங்கப்பூரர்கள்
ஜோகூர் பாரு: இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சுற்றுப்பயணிகளில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்று மலேசிய சுற்றுப்புற, கலைகள், கலாசார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை மலேசியாவுக்கு ஏறத்தாழ 3.2 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பயணம் மேற்கொண்டதாகவும் அவர்களில் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் பேர் சிங்கப்பூரிலிருந்து வந்ததாகவும் அமைச்சின் தலைமைச் செயலாளர் சராயா ஆர்பி கூறினார்.
எதிர்க்கட்சி களமிறங்கவில்லை;
துனீசியர்கள் வாக்களிப்பு
துனீஸ்: துனீசியாவில் தேர்தல் நடைபெறுகிறது. துனீசியர்கள் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் எதிர்க்கட்சிகள் களமிறங்காத காரணத்தால் இத்தேர்தலால் எவ்விதப் பலனும் இல்லை. அதிகாரமற்ற நாடாளுமன்றம் மட்டுமே மிஞ்சும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டில் பல அரபு நாடுகளில் சர்வாதிக்காரத்துக்கு எதிரான புரட்சி வெடித்தது. இருப்பினும், அதன்பிறகு துனீசியாவில் மட்டுமே ஜனநாயகம் இவ்வளவு காலம் தக்கவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஜனநாயக முறையை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்குடன் எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாத தற்போதைய வாக்களிப்பு நடைபெற்று வருவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
பிரிட்டனில் நிலவும்
சுகாதார நெருக்கடிநிலை
லண்டன்: பிரிட்டனில் சுகாதார நெருக்கடிநிலை நிலவுகிறது. அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு தாதியர் தற்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த வாரம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.
மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். மருந்தகங்களிலும் நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள் பற்றாக்குறை நிலவுகிறது.

