இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், அவருடைய இரண்டு பிள்ளைகள் ஆகியோர் பிரிட்டனில் கொலை செய்யப்பட்டுள்ளனர். மூவரும் நார்த்ஹெம்பட்டனில் வசித்துவந்த வீட்டில் கடும் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டனர்.
மாண்டவர்கள் கேரளாவைச் சேர்ந்த 35 வயதான அஞ்சு அஷோக், அவரது மகன் ஜீவா சஜூ,6, ஜான்வி சஜூ, 4 ஆகியோர் எனக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இதன் தொடர்பில் 52 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் அஞ்சுவின் கணவர் சஜூ என நம்பப்படுகிறது.
அஞ்சு கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், சஜூ தங்கள் மகளையும் பேரப்பிள்ளைகளையும் பலமுறை துன்புறுத்தியுள்ளதாக கேரளாவில் வசிக்கும் அஞ்சுவின் பெற்றோர் கூறினர். சஜூக்கு அடிக்கடி கோபம் வரும் என்றும், அப்படிப்பட்ட சமயங்களில் மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து துன்புறுத்தும் பழக்கம் உண்டு என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த ஓராண்டு காலமாக பிரிட்டனில் அஞ்சு தாதியாக வேலைபார்த்து வந்துள்ளார். சஜூக்கு பிரிட்டனில் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும், செலவுகள் அனைத்தையும் அவரே நிர்வகித்ததாகவும், தங்களுக்கு பணம் அனுப்ப அவர் மறுத்ததாகவும் அஞ்சுவின் பெற்றோர் கூறினர்.