லஞ்சம்: முன்னாள் சீன அமைச்சர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கம்
பெய்ஜிங்: லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சீனாவின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் சியாவ் யாசிங்கை அந்நாட்டு அரசு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் இனி அரசுப் பணிகளில் ஈடுபட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது.
62 வயது சியாவின் பதவி குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
பாப்புவாவில் ராணுவத்தைக் குறைக்க ஜோக்கோவி பரிசீலனை
இந்தோனீசியா: பாப்புவாவில் இருக்கும் இந்தோனீசிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ பரிசீலித்து வருகிறார்.
இந்தோனீசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகும் இலக்குடன் பாப்புவாவில் நீண்டகாலமாக பல அமைப்புகள் இயங்கிவருகின்றன.
அந்த அமைப்புகளை இந்தோனீசிய ராணுவம் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாப்புவாவின் சுதந்திர வேட்கையை அடக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இந்தோனீசிய ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் பாப்புவாவில் பலர் துன்புறுத்தப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதைத் தொடர்ந்து, பாப்புவாவில் இந்தோனீசிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது நல்லது என்றாலும் தொடர்ந்து கண்டிப்புடன் நடந்துகொள்வது அவசியம் என்று புதிய ஆயுதப் படைத் தலைவரை நியமித்த பிறகு அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்தார்.
இல்லாவிடில், பாப்புவாவில் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதம் தொடரும் என்று அவர் கூறினார்.
கடலில் தவித்த 104 ரோஹிங்கிய அகதிகளைக் காப்பற்றிய இலங்கை
கொழும்பு: இந்தியப் பெருங்கடலில் தவித்த 104 ரோஹிங்கிய அகதிகளை இலங்கைக் கடற்படை காப்பாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் அகதிகள் இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறினர். மியன்மாரில் தங்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறையிலிருந்தும் பங்ளாதேஷ் அகதி முகாம்களில் நிலவும் சிரமமிக்க வாழ்க்கையிலிருந்தும் தப்பிக்க ரோஹிங்கிய அகதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து கடல்வழியாகத் தப்பிக்கின்றனர்.
இந்நிலையில், அகதிகளை இலங்கை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக அந்நாட்டு கடற்படை கூறியது. அகதிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அகதிகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
அகதிகள் ஏற்பு: சுவிட்சர்லாந்து தற்காலிக நிறுத்தம்
ஜெனிவா: அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஐநா திட்டத்திலிருந்து சுவிட்சர்லாந்து தற்காலிகமாக விலகியுள்ளது. ஏற்கெனவே, சுவிட்சர்லாந்தில் இருக்கும் அகதிகளுக்குத் தீர்வு கண்டு, அவர்களைக் குடியமர்த்திவிட்டு மற்ற அகதிகளை ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அது கூறியது.
உக்ரேன் போர் காரணமாக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்று சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
எர்டொவான் கேட்டார்; முடியாது எனக் கூறிவிட்டது சுவீடன்
ஸ்டோக்ஹல்ம்: நாடு கடத்தப்பட்ட துருக்கியச் செய்தியாளரைத் திரும்பவும் துருக்கிக்கு அனுப்பி வைக்கும்படி அந்நாட்டு அதிபர் ரிசெப் தயிப் எர்டொவான் விடுத்த கோரிக்கையை ஏற்க சுவீடன் மறுத்துவிட்டது. இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் நேட்டோவில் இணைய சுவீடன் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என்று துருக்கி தெரிவித்திருந்தது.
2016ஆம் ஆண்டில் அதிபர் எர்டொவானின் ஆட்சியைக் கவிழ்க்க நடத்தப்பட்ட முயற்சியில் ஸமான் டெய்லி நாளிதழின் தலைமை ஆசிரியர் புலென்ட் கெனிசுக்குத் தொடர்பு உள்ளது என்று துருக்கி குற்றம் சாட்டுகிறது.
ஆனால் திரு கெனிஸ் மீது துருக்கி சுமத்தும் சில குற்றச்சாட்டுகள் சுவீடன் நாட்டுச் சட்டத்தின்கீழ் குற்றங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு கெனிஸின் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும் சாத்தியம் அதிகம் இருப்பதால் அவரைத் துருக்கிக்கு அனுப்பப்போவதில்லை என்று சுவீடன் கூறியது.

