செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
54449953-3264-468e-9f77-5a767b3713d7
-

மூழ்கிய தாய்லாந்துப் போர்க்கப்பல்;

நான்கு சடலங்கள் மீட்பு

பேங்காக்: கடலில் மூழ்கிய தாய்லாந்துப் போர்க்கப்பலின் நான்கு மாலுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் இருந்த இருவரை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றினர்.

இன்னும் 24 மாலுமிகளைக் காணவில்லை என்று தெரிவித்த தாய்லாந்து கடற்படை, தேடுதல் பணி தொடரும் என்று கூறியது. இதுவரை 77 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

பாத்தாங் காலி நிலச்சரிவு: இன்னும் 9 பேரைக் காணவில்லை

பாத்தாங் காலி: மலேசியாவின் கெந்திங் மலைக்கு அருகில் உள்ள பாத்தாங் காலி நகரில் அண்மையில் நிகழ்ந்த நிலச்சரிவின் காரணமாக இதுவரை 24 பேர் மாண்டுவிட்டனர். 61 பேரை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றினர். இந்நிலையில், ஒன்பது பேரை இன்னும் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பணித்துறை தெரிவித்தது.

பிணைக் கைதிகளைக் காப்பாற்ற பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கை

பெஷாவர்: பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு முகாம் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டைச் சேர்ந்த தலிபான் போராளிகள், அந்த முகாமைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதில் இருந்தோரைப் பிணைக் கைதிகளாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில், பிணைக் கைதிகளைக் காப்பாற்றும் நோக்கில் அதிரடி நடவடிக்கை ஒன்றை பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.

முகாமிலிருந்து வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். நேற்றிரவு நிலவரப்படி அதிரடி நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் ராணுவம் கருத்து தெரிவிக்கவில்லை.

கலிஃபோர்னியா நிலநடுக்கம்: மின்சாரமின்றி பலர் தவிப்பு

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் அருகில் உள்ள கடற்பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 6.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கலிஃபோர்னியாவில் உள்ள பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாலங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.