புத்ரஜெயா: மலேசியாவில் 'என்ஆர்சி' எனும் தேசிய மீட்பு நிலையம் உள்ளிட்ட உட்பட பல அரசாங்க அமைப்புகளைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலைத்துள்ளார். தேசிய மீட்பு நிலையம் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினின் தலைமையில் இயங்கிய அமைப்பு.
கலைக்கப்பட்ட அமைப்புகள் இப்போது தேவைப்படாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திரு அன்வார் தெரிவித்தார்.
"இதர அமைப்புகள் மேற்கொள்ளும் அதே பணிகள் சிலவற்றை தேசிய மீட்பு நிலையமும் மேற்கொண்டுவந்ததால் அது கலைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் இருந்த தேவைகளைப் பூர்த்திசெய்யவே அமைப்பு உருவாக்கப்பட்டது," என்று நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் சந்திப்பில் திரு அன்வார் கூறினார். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய மீட்பு அமைப்பின் தலைவராகத் திரு முகைதீன் நியமிக்கப்பட்டார்.
ஒரே பணிகளை மேற்கொள்ளும் சில அரசாங்க அமைப்புகளைக் கலைப்பதற்குப் பரிந்துரைகள் வந்ததாகத் திரு அன்வார் சொன்னார்.
"காவல்துறையும் மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவும் கையாளக்கூடிய விவகாரங்களுக்கென உருவாக்கப்பட்ட அமைப்புகளைக் குறைக்கவேண்டும். ஒரே செயலை மேற்கொள்ள பல அமைப்புகள் இருந்தால் அவை ஒவ்வொன்றையும் நிர்வகிக்கக் கூடுதல் செலவாகும்," என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
கலைக்கப்பட்ட மற்ற சில அரசாங்க அமைப்புகளைப் பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இதற்கிடையே, பிரதமரின் வேலைச் சுமையைக் குறைக்க வேறொருவருக்கு ஒப்படைக்கக்கூடிய பணிகளைத் தாமும் மூத்த அரசாங்கச் செயலாளர் முகம்மது ஸுக்கி அலியும் அடையாளம் கண்டதாகவும் திரு அன்வார் தெரிவித்தார்.
"பல பொறுப்புகளை நான் விட்டுக்கொடுத்துவிட்டேன். சில பொறுப்புகளைத் துணைப் பிரதமர் கையாளலாம் என்பதே அதற்குக் காரணம்," என்றார் திரு அன்வார்.
மலேசியா: முகைதீனின் தேசிய மீட்பு நிலையத்தைப் பிரதமர் அன்வார் கலைத்தார்

