காற்பந்துத் துளிகள்

காற்பந்துத் துளிகள்

2 mins read
0ba15da0-26e1-497e-abcb-8a64ec2eec76
-

அலைமோதிய கூட்டம், ஆகாயத்தில் வெற்றியாளர்கள்

புவெனஸ் அயர்ஸ்: காற்பந்து உலகக் கிண்ணத்தை 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் புவெனஸ் அயர்சில் உற்சாக வெள்ளத்தில் திளைக்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெற்றியை மக்களுடன் இணைந்து கொண்டாட அர்ஜென்டினா விளையாட்டாளர்கள் மேல் தளத்தில் மூடப்பட்டாத பேருந்து ஒன்றில் நகரம் முழவதும் வலம் வரத் திட்டமிட்டனர்.

எனினும், சாலைகளில் மக்கள் திரளாகப் படையெடுத்ததால் அர்ஜென்டீனிய விளையாட்டாளர்கள் பாதி வழியில் ஹெலிகாப்டருக்கு மாற்றப்பட்டனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ்வாறு செய்யப்பட்டது.

இன ரீதியான அவதூறுக்கு பிரான்ஸ் காற்பந்துச் சங்கம் கண்டனம்

பாரிஸ்: சில நாள்களுக்கு முன்பு நடந்து முடிந்த இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மிகவும் விறுவிறுப்பான இறுதியாட்டத்தில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது பிரான்ஸ். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பிரான்சின் சில விளையாட்டாளர்கள் இன ரீதியான அவதூறை எதிர்கொண்டனர்.

அந்நாட்டின் காற்பந்துச் சங்கம் அதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்ட ரீதியாகப் புகார் அளிப்பது குறித்துத் தாங்கள் ஆலோசித்ததாகவும் சங்கம் குறிப்பிட்டது.

மீண்டும் தொடங்கிய உள்நாட்டுக் காற்பந்து; நியூகாசல் வெற்றி

நியூகாசல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் ஆரவாரம் இன்னும் ஓயாத வேளையில் பல உள்நாட்டுக் காற்பந்துப் போட்டிகள் மீண்டும் தொடங்கிவிட்டன.

இங்கிலாந்திலன் 'இஎஃப்எல்' போட்டியில் பொர்ன்மத்தை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் மூன்றாம் இடத்தை வகிக்கும் நியூகாசல் யுனைடெட். அந்த நான்காம் சுற்று ஆட்டத்தில் நியூகாசல் சற்று தடுமாறியபடி வென்றது.

நேற்று முன்தினம் பின்னிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பொர்ன்மத்தின் ஆடம் ஸ்மித் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பினார்.