மும்பை: இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் படகு ஒன்றில் குறைந்தது 100 ரோஹிங்யா அகதிகள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் 16லிருந்து 20 பேர் மரணமடைந்திருக்கக்கூடும் என்று மியன்மாரைச் சேர்ந்த இரண்டு ரோஹிங்யா போராளி குழுக்கள் தெரிவித்துள்ளன.
நேற்று முன்தினம் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து கப்பல்கள் அந்தப் படகை நோக்கிச் சென்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் குறிப்பிட்டன. இந்த விவகாரம் குறித்துத் தங்களிடம் தகவல் ஏதும் இல்லை என்று இந்தியக் கடற்படையின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
சில நாள்களுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலில் சிக்கியிருந்த 104 ரோஹிங்யா அகதிகளை இலங்கையின் ராணுவப் படையினர் மீட்டனர்.
இதற்கிடையே, ஆள்கடத்தல் கும்பலில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 12 பேரை மியன்மார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. சந்தேக நபர்களுக்கும் இம்மாதம் ஐந்தாம் தேதியன்று ஹ்லெகு நகரில் 13 ரோஹிங்யா அகதிகள் மாண்டு கிடந்ததற்கும் தொடர்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
யங்கூன் நகருக்கு அருகே உள்ள ஹ்லெகுவின் ஒரு பகுதியைக் காவல்துறையினர் இம்மாதம் ஒன்பதாம் தேதியன்று சோதனையிட்டனர். அப்போது ஆள்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஐந்து வாகனங்களையும் ஒரு எண்ணெய்க் கப்பலையும் முடக்கப்பட்டதாக மியன்மாரின் ராணுவ அரசாங்கம் குறிப்பிட்டது.
ஆள்கடத்தல் கும்பல் மேற்கு ராக்கைன் மாநிலத்திலிருந்து 255 ரோஹிங்யா அகதிகளைக் கடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. அகதிகள் கடத்திச் செல்லப்பட்ட இடம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.