ஐநா: ஐநா பாதுகாப்பு மன்றம், 74 ஆண்டுகளில் முதன்முதலாக மியன்மார் தொடர்பில் முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது.
அந்நாட்டில் வன்செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டும். ஆங் சான் சூச்சி அம்மையார், 77, உள்ளிட்ட அரசியல் கைதிகள் அனைவரையும் ராணுவ நிர்வாகம் விடுதலை செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.
மியன்மார் பிரச்சினையை எப்படி கையாளுவது என்பது தெரியாமல் இவ்வளவு காலமும் 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு மன்றம் தடுமாறி வந்தது.
மியன்மாருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்று சீனாவும் ரஷ்யாவும் வாதிட்டு வந்தன. மியன்மார் தொடர்பான தீர்மானம் புதன்கிழமை வாக்கெடுப்புக்கு வந்தபோது சீனா, ரஷ்யாவுடன் இந்தியாவும் வாக் ெகடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
எஞ்சிய 12 உறுப்பு நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. மியன்மாரில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூச்சி அம்மையாரின் அரசாங்கம் நடந்து வந்தது.
அந்த அரசைக் கவிழ்த்து விட்டு ராணுவம் நாட்டை தன்வசப்படுத்திக் கொண்டது. சூச்சி அம்மையாரைச் சிறைப்படுத்தியது.
ராணுவ ஆட்சியை எதிர்த்தவர்கள் நசுக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்கியதில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவித்தன.
மியன்மாரில் அனைத்து வகை வன்செயல்களும் முடிவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஐநா தீர்மானம், மனித உரிமைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; அடிப்படை சுதந்திரம் கட்டிக்காக்கப்பட வேண்டும்; சட்ட ஆட்சி நடக்க வேண்டும் என்று கோரியது.
மியன்மார் தொடர்பில் இதற்கு முன்னதாக ஐநா பாதுகாப்பு மன்றம் 1948ல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மியன்மார் ஐநாவில் உறுப்பு நாடாக அந்தத் தீர்மானம் வகை செய்தது.
மியன்மார் தொடர்பான தீர்மானம் 2008ல் விவாதத்துக்கு வந்தபோது, சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
பிறகு மியன்மாரில் இருந்து 700,000 அகதிகள் பக்கத்து பங்ளாதேஷ் நாட்டிற்கு உயிர்தப்பி ஓடினர். அதைத் தொடர்ந்து பிரிட்டன் 2018 டிசம்பரில் மியன்மாருக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றது. ஆனால், வாக்கெடுப்பு நடக்கவே இல்லை.