ஜோகூர் பாரு: மலேசியாவில் பருவமழை காரணமாக திரங்கானு, கிளந்தான் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
பருவமழை அடுத்ததாக ஜோகூர் மாநிலத்தை நோக்கி திரும்புகிறது. இதனால் அம் மாநில மக்கள் வெள்ளத்தைச் சமாளிக்க ஆயத்தமாகி வருகிறார்கள். அந்த மாநிலத்தில் மழை அதிகம் பெய்தால் கம்போங் பாசிர் என்ற கிராமத்தில்தான் முதன்முதலாக வெள்ளம் ஏற்படும். அந்தக் கிராமம் சுங்கை ஸ்கூடாயில் அமைந்திருக்கிறது.
"வெள்ளமும் அலையேற்றமும் சேர்ந்து கொண்டால் முதன்முதலாக கம்போங் பாசிரைத் தான் பாதிக்கும். இந்தக் கிராமத்தில் மொத்தம் 1,188 வீடுகள் இருக்கின்றன.
"அடுத்தடுத்தாக பக்கத்தில் இருக்கக்கூடிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும்," என கம்போஸ் பாசிர் கிராமத் தலைவர் ஸாய்னி சினோங் கூறினார்.
"பலவற்றையும் தயார்நிலையில் வைத்து இருக்கிறோம். தொண்டூழியர்கள் தயாராக உள்ளனர். கிராமத்தினருக்கு தற்காலிக நிவாரணம் முகாம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மலேசியாவின் பாத்தாங் காலியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து தாங்கள் முழு விழிப்புநிலையில் இருப்பதாக ஜோகூர் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் இடைக்கால இயக்குநர் முகம்மது ரிசால் புவாங் கூறினார்.
மொத்தம் உள்ள 1,501 அதிகாரிகளில் 20 விழுக்காட்டினருக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார். அவர்களும் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
மக்கள், குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிப்போர் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவில் வெள்ளம் காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துவிட்டனர். 20,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். 70,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

