'சிக்கன் டிக்கா மசாலா'
சமையல் கலைஞர் மரணம்
கிளாஸ்கோ: 'சிக்கன் டிக்கா மசாலா' சமையல் கலைஞர் அலி அகமது அஸ்லாம், பிரிட்டனில் கிளாஸ்கோ நகரில் தனது 77வது வயதில் காலமானார். (படம்). வேகவைக்கப்பட்ட கோழி இறைச்சியில் பலவகை மசாலாவைச் சேர்த்து, தக்காளி சாறு, சூப்பையும் சேர்த்து சமைக்கப்படுவது சிக்கன் டிக்கா மசாலா.
ஒரே மாதிரியான பெயரில், மாறுபட்ட சுவையில் கிடைக்கும் சிக்கன் டிக்கா மசாலாவை அலி அகமது அஸ்லாம் 1970களில் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
சீன விமானங்களை எச்சரித்து
விரட்டிய தைவான் விமானங்கள்
தைப்பே: தன் எல்லைக்குள் ஊடுருவிய சீன விமானங்களை எச்சரித்து விரட்டியதாக தைவான் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. தைவானின் தென்கிழக்கு விமானத் தற்காப்புப் பகுதிக்குள் சீனாவின் 21 போர் விமானங்களும் எச்6 ரக குண்டுவீச்சு விமானங்களும் முன்னெச்சரிக்கை விமானமும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானமும் ஆகாயத்தில் எண்ணெய் நிரப்பும் விமானமும் ஊடுருவி பறந்ததாக தைவான் அமைச்சு கூறியது. அவற்றை எச்சரித்து தனது விமானங்கள் விரட்டியதாகவும் அது நேற்று தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைப்பு
மெல்பர்ன்: ஆசியாவின் மிகப்பெரும் குற்றச்செயல் கும்பலின் தலைவரும் உலகில் அதிகம் தேடப்பட்டு வந்தவருமான சீனக் கனடியரான ஸி சி லோப், 59, ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைதானதாக காவல்துறை தெரிவித்தது.
அந்த நபர், உலக அளவில் போதைப்பொருளை அதிகமாகத் தயாரித்து அதை விநியோகித்து வந்த ஆசியாவின் மாபெரும் கொள்ளைக்கூட்டமான 'சாம் கோர்' என்ற அமைப்பின் தலைவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சி லோப் நேற்று மெல்பர்ன் நீதிமன்றத்தில் முன்னிலையாக இருந்தார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
'அமெரிக்க முடிவு விதிமீறிய ஒன்று'
வாஷிங்டன்: ஹாங்காங்கில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களை சீனாவில் இருந்துவரும் பொருள்கள் என்று அமெரிக்கா வகைப்படுத்துவது அனைத்துலக விதியை மீறிய செயல் என்று உலக வர்த்தக நிறுவனம் கண்டித்தது. ஆனால் அமெரிக்கா அதை நிராகரித்துவிட்டது. ஹாங்காங் பொருள்களை சீனாவின் பொருள்களாகக் கருதும் முடிவு முன்னாள் அதிபர் டிரம்ப் எடுத்த முடிவாகும்.

