வாஷிங்டன்: அமெரிக்காவில் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு அதன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
மொத்தம் 814 பக்கங்களைக் கொண்ட அறிக்கை நேற்று முன் தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
கலவரத்துடன் தொடர்புள்ள முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் உள்ளிட்டோர் இனி அரசாங்கத்தில் பதவி வகிப்பதற்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கும்படி இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
இது உட்பட கிட்டத்தட்ட 12 பரிந்துரைகளை விசாரணைக் குழு முன்வைத்துள்ளது.
வருங்காலத்தில் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக யாரும் கலவரங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் முயற்சி இது.
அறிக்கையில், பொதுச் சேவை தொடர்பில் பற்றுறுதி எடுத்த யாரும் பின்னர் அரசாங்கத்துக்கு எதிரான கலவரத்தைத் தூண்டினால் அரசமைப்புச் சட்டத்தின் 14வது திருத்தத்தின்கீழ் எதிர்காலத்தில் அரசாங்கச் சேவையில் ஈடுபடுவதற்கு அவருக்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றப் பாதுகாப்பில் ஈடுபடும் காவல்துறையினருக்குப் பயிற்சி அளிப்பது குறித்தும் விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இருப்பினும் இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் செல்லாக்காசாகிவிடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை அடுத்த மாதம் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வரவிருப்பது இதற்குக் காரணம்.
அமெரிக்காவில் சென்ற மாதம் இடைத்தவணைத் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளுக்கு ஏற்ப இந்த அவையில் குடியரசுக் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கலவரம் குறித்து விசாரணை நடத்திய குழுவில் ஏழு பேர் ஜனநாயகக் கட்சியினர். இருவர் குடியரசுக் கட்சிக்காரர்கள்.

