பாலஸ்தீனத்தில் சிலி நாட்டு தூதரகம்
சன்டியாகோ: பாலஸ்தீன வட்டாரத்தில் தூதரகத்தை அமைக்கத் திட்டமிடுவதாக சிலி அதிபர் கேப்ரியல் போரிக் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை உறுதிசெய்த சிலியின் வெளியுறவு அமைச்சர் அண்டோனியா உர்ரெஜோலா தூதரகம் எப்போது திறக்கப்படும் என்று இன்னும் முடிவாகவில்லை என்றார். பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டையும் தனி நாடுகளாக சிலி அங்கீகரிப்பதாக அவர் குறிப்பிட்டார். உலகின் வெகு சில நாடுகளே பாலஸ்தீனத்தில் அவற்றின் தூதரகங்களை அமைத்துள்ளன.
பாகிஸ்தானிய பஞ்சாப் முதல்வரின் பதவி பறிபோனது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் சௌத்ரி பர்வேஸ் இலாஹி. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய நண்பரான இவர், சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றார். திரு இலாஹியின் பதவி நீக்கம் உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் அவரது அமைச்சரவை கலைக்கப்பட்டதாகவும் மாநில ஆளுநர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும்வரை திரு இலாஹி தற்காலிக முதல்வராகப் பொறுப்பில் நீடிப்பார்.
'மெர்க்' தயாரித்த கொவிட்-19 தடுப்பு மருந்து உயிரிழப்பை தடுக்கவில்லை
லண்டன்: 'மெர்க் அண்ட் கோ' நிறுவனம் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பாற்றலுக்குத் தயாரித்த 'மால்னுபிராவிர்' மருந்து, நோயிலிருந்து விரைவில் குணமடைய உதவுகிறது. ஆனால் மருத்துவமனையில் தங்கவேண்டிய காலத்தைக் குறைக்கவோ மரண விகிதத்தைக் குறைக்கவோ உதவவில்லை என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் மட்டும் இம்மருந்தின் விற்பனை மூலம் ஐந்து பில்லியன் டாலர் திரட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.
கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை குறைக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கம் கொவிட்-19 கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அதன் பங்கைப் பெருமளவு குறைக்கவிருக்கிறது. சீனாவில் தற்போது நிலவும் புதிய கிருமிப் பரவல் அலை கவலையளித்தபோதும் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் இவ்வாறு முடிவெடுத்துள்ளது. நாடாளுமன்றம் இவ்வாரம் அதிபருக்கு அனுப்பவிருக்கும் செலவுத் திட்டத்தில் தடுப்பூசிகள், பரிசோதனைகள், சிகிச்சை ஆகியவற்றுக்குப் புதிதாக நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை.

