செய்திக்கொத்து

2 mins read
f752542c-26cc-45db-8d98-8041d85fc4fa
-

பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் தீ; 20 பேர் மரணம்

மாஸ்கோ: ரஷ்யாவின் சைபீரியா வட்டாரத்தில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லம் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உடல்கருகி மாண்டதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்தது.

முதியோர் இல்லத்தின் இரண்டாவது மாடி முழுவதும் தீக்கு இரையானதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

வலைவீசித் தேடப்பட்டவரை

கைது செய்த ஸ்பெயின்

மட்ரிட்: அமெரிக்காவின் புலனாய்வுத் துறைப் பிரிவு வலைவீசித் தேடிய ஆடவரை ஸ்பானிய காவல்துறையினர் கைது செய்தனர்.

பாலியல் தொழிலுக்காக ஆட்களைக் கடத்தியது, வயது குறைந்தோரை வைத்து ஆபாசப் படங்கள் எடுத்தது ஆகிய குற்றங்கள் தொடர்பாக அந்த 40 வயது நியூசிலாந்து நாட்டவரை அதிகாரிகள் தேடினர்.

புலனாய்வுத் துறைப் பிரிவு தேடும் குற்றவாளிகள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் அந்த ஆடவர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வேறு ஒரு பெயரில் ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் அந்த ஆடவர் தங்கிக்கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

டிரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எழுந்துள்ள குரல்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு அதிபர் டிரம்ப்பின் தூண்டுதல் காரணம் என்று அவருக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக அவருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டாலும் அவர் இனி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாதபடி பார்த்துக்கொள்ளும்படி கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கக் கடைத்தொகுதியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் மரணம்

மினியாபொலிஸ்: அமெரிக்காவின் மினிசோட்டா நகரில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் இரு கும்பல்களுக்கிடை யிலான வாக்குவாதம் மோசமடைந்து துப்பாக்கிச்சூடாக மாறியது. இதில் 19 வயது இளையர் மாண்டார்.

துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு கடைத்தொகுதியில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

வெடித்துச் சிதறிய கனரக வாகனம்; எட்டு பேர் உயிரிழப்பு

ஜொகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜொகனஸ்பர்க் நகரில் எரிவாயுவை ஏந்திச் சென்ற கனரக வாகனம் பாலத்துக்கு அடியில் சிக்கி வெடித்துச் சிதறியது.

இதில் குறைந்தது எட்டு பேர் மாண்டனர். இந்தச் சம்பவம் காரணமாகப் பலர் காயமடைந்ததாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருகில் இருந்த கட்டடங்கள் சேதமடைந்ததாக தென்னாப்பிரிக்க அவசரகாலச் சேவைப் பிரிவு கூறியது.