விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
5a17ff01-b1bd-48b7-8911-bbd1ae795f8b
-

இல்ஹான் ஃபாண்டி: கோல்

வித்தியாசம் முக்கிய அம்சம்

சிங்கப்பூர்: தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான ஏஎஃப்எஃப் மிட்சுபிஷி கிண்ணப் போட்டியில் கோல் வித்தியாசம் ஒரு முக்கிய அம்சமாக அமையலாம் என்று சிங்கப்பூர் வீரர் இல்ஹான் ஃபாண்டி (படத்தில் நடுவில். படம்: சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம்) கூறியுள்ளார். 'பி' பிரிவில் 6-0 எனும் கோல் கணக்கில் வியட்நாம் லாவோசை வென்றதும் 5-0 எனும் கோல் கணக்கில் மலேசியா லாவோசை வென்றதும் அவர் அவ்வாறு கூறியதற்கான காரணங்கள்.

இன்று லாவோசைச் சந்திக்கிறது சிங்கப்பூர். அதை முன்னிட்டு இல்ஹாம் ஃபாண்டி அவ்வாறு பேசினார்.

போட்டியில் பெரிதும் சிரமப்பட்டு வந்துள்ள லாவோசுக்கு எதிராக கோல்களைக் குவிக்கும் இலக்குடன் உள்ளது சிங்கப்பூர். அதே வேளையில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்றும் இல்ஹான் ஃபாண்டி குறிப்பிட்டார்.

புருணையை நசுக்கிய இந்தோனீசியா

கோலாலம்பூர்: ஏஎஃப்எஃப் மிட்சுபிஷி கிண்ணக் காற்பந்துப் போட்டியில் புருணையை 7-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தோனீசியா. நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஏழு கோல்களையும் வெவ்வேறு விளையாட்டாளர்கள் போட்டனர்.

'ஏ' பிரிவில் தனது முதல் இரு ஆட்டங்களையும் வென்று முதலிடம் வகிக்கிறது இந்தோனீசியா. மொத்தம் ஒன்பது கோல்களைப் போட்டு ஒரு கோலை மட்டும் விட்டுக்கொடுத்துள்ளது.

தென்கிழக்காசியாவில் அபாரமான அணியாக விளங்கி வந்துள்ளபோதும் ஏஎஃப்எஃப் கிண்ணத்தை இந்தோனீசியா இதுவரை வென்றதில்லை. எனினும், ஆறு முறை போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியிருக்கிறது.

மருத்துவமனையில் பெலேயுடன் அவரின் குடும்பம்

சாவ் பாவ்லோ: உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்றுவரும் பிரேசில் காற்பந்து நட்சத்திரம் பெலேயுடன் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாட அவரின் குடும்பத்தார் நேற்று முன்தினம் மருத்துவமனையில் திரண்டனர். புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள 82 வயது பெலே நவம்பர் மாத இறுதியிலிருந்து மருத்துவமனையில் இருந்து வருகிறார்.

பெலேயின் உடல்நலம் தேறவேண்டும் என்று உலகெங்கும் அவரின் ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

காற்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் பெலே. அவரே ஆகச் சிறந்த விளையாட்டாளர் என்றும் சிலர் கூறுவர். 1958, 1962, 1970ஆம் ஆண்டுகளில் பிரேசிலுக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்தார் பெலே. அந்தக் காலகட்டத்தில் பிரேசிலின் துடிப்பான விளையாட்டை இன்றும் பலரால் மறக்கமுடியாது.