மாஸ்கோ: ரஷ்யாவின் ஆகாயப் படைத் தளம் ஒன்றின்மீது உக்ரேன் மேற்கொண்ட வானூர்தித் தாக்குதலில் குறைந்தது மூவர் மாண்டுவிட்டனர். எங்கெல்ஸ் ஆகாயப் படைத் தளத்திற்கு அருகே அந்த வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டபோதும் மூவர் உயிரிழக்க நேரிட்டதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
எங்கெல்ஸ் ஆகாயப் படைத் தளம் உக்ரேன் எல்லையிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தாக்குதலுக்கு உக்ரேன் ராணுவம் அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தத் தாக்குதல் உக்ரேனில் ரஷ்யாவின் செயல்களுக்கான பதிலடி என்று உக்ரேன் ஆகாயப் படைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் திருநாளான நேற்று முன்தினம் உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டன. மேலும், சனிக்கிழமையன்று குப்பியான்ஸ்-லைமன் பகுதியில் சுமார் 60 உக்ரேனிய ராணுவ வீரர்களைத் தனது படைகள் கொன்றதாகவும் ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு கூறியிருந்தது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் இந்த விவரத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியிருந்த வேளையில் உக்ரேன்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. திரு புட்டின் அவ்வாறு கூறியது பாசாங்குதான் என்று வாஷிங்டன் கூறி வந்துள்ளது.
இதற்கிடையே, ஐக்கிய நாட்டு நிறுவன பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினர் தகுதியை ரஷ்யாவிடமிருந்து பறிக்குமாறு உக்ரேன் குரல் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.
அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ட்மிட்ரோ குலோபா இதைத் தெரிவித்தார்.

