வாஷிங்டன்: தைவானுக்கு அருகே சீனா இந்த வாரம் ராணுவப் பயிற்சி மேற்கொண்டது சினமூட்டும் செயல் என்று அமெரிக்கா சாடியுள்ளது. தைவான் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கு உதவிக்கரம் நீட்டுவதை அமெரிக்கா தொடரும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த வட்டாரத்தில் சீனா மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள் கவலை தருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது வட்டார அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் தவறாக இட்டுச்செல்லக்கூடும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் நேற்று தெரிவித்தது. தைவானுக்குப் போதுமான தற்காப்புத் திறன் இருப்பதைக் கட்டிக்காக்கும் வகையில் அமெரிக்கா தைவானுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் என்றும் அது தெரிவித்தது.
தைவான் விவகாரம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இரு நாடுகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன.
கடந்த நவம்பர் மாதம் இந்தோனீசியாவில் நடந்த ஜி20 உச்ச நிலை மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் 2023 முற்பகுதியில் சீனா செல்லத் திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினத்திற்கு முந்தைய 24 மணி நேரத்தில் சீனா 71 போர் விமானங்களை தைவான் பகுதிக்கு அனுப்பியிருந்தது என்றும் அவற்றில் 47 விமானங்கள் தைவானின் கடற்பகுதியில் பறந்தது என்றும் கூறப்படுகிறது. தைவானை சீனாவின் ஒரு பகுதி என்று சீனா கூறிவருகிறது. தேவையேற்படின் தைவான் வலுக்கட்டாயமாக சீனாவுடன் இணைத்துக்கொள்ளப்படும் என்று சீனா கூறுகிறது. ஆனால் சீனாவின் உரிமைக்கோரல்களை தைவான் மறுத்து வருகிறது.

