ஆர்சின் வெங்கர் பார்த்திருக்க மீண்டெழுந்த ஆர்சனல்
லண்டன்: ஆர்சனல் குழு நிர்வாகத்தை 2018இல் விட்டுச் சென்ற ஆர்சின் வெங்கர் பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்து தமது பழைய அணியைக் கவனிக்க ஆர்சனல் குழு மீண்டெழுந்தது.
ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் வில்லியன் சலிபா என்ற ஆட்டக்காரரின் தப்பாட்டம் காரணமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி வெஸ்ட் ஹேம் முன்னுக்குச் சென்றது.
பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் புக்காயோ சாக்காவின் கோல் மூலம் ஆட்டத்தை ஆர்சனல் சமன் செய்தது.
பின்னர் ஆட்டத்தின் 59, 69வது நிமிடங்களில் கேப்பிரியல் மார்டினேல்லி, எடி இங்கெட்டியா இருவரும் போட்ட கோல்களால் ஆர்சனல் இறுதியில் 3-1 என வெற்றி பெற்றது.
"நாங்கள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால், போடும் வாய்ப்பு மட்டும் கிடைக்கப் பெறாமல் இருந்தோம். தொடர்ந்து முயற்சி செய்து ஒரு கோல் போட்ட பின் சூழ்நிலை எங்களுக்குச் சாதகமாக மாறுவதை உணர்ந்தோம்," என்று கோல் போட்ட இங்கெட்டியா கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் பிரிமியர் லீக் தரவரிசையில் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட ஆர்சனல் இரண்டாம் நிலையில் இருக்கும் நியூகாசல் குழுவைக் காட்டிலும் ஐந்து புள்ளிகள் கூடுதலாக எடுத்துள்ளது.
வில்லாவை பதம் பார்த்த லிவர்பூல்
பர்மிங்ஹம்: உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்களுக்குப் பிறகு பிரிமியர் லீக்கில் தனது கவனத்தைத் திருப்பிய லிவர்பூல் நேற்று முன்தினம் ஆஸ்டன் வில்லாவை 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் பதம் பார்த்தது.
முதல் பாதி ஆட்டம் முடிவதற்குள் முகம்மது சாலா, வர்ஜில் வான் டைக் இருவரும் தலா ஒரு கோல் போட லிவர்பூல் அணி ஆட்டத்தைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்தது.
ஆனால், இரண்டாம் பாதி ஆட்டத்தில் வில்லாவின் ஒலி வாட்கின்ஸ் தமது அணி சார்பாக ஒரு கோல் போட லிவர்பூல் பதற்றமான சூழலை எதிர்கொண்டது.
பின்னர் லிவர்பூலின் இளைய வீரரான ஸ்டெஃபான் பாஜ்டெசிச் மாற்று ஆட்டக்காரராக வந்து ஒரு கோல் போட்ட பின்னர் இறுதியாக லிவர்பூல் அணி 3-1 என்று வெற்றி பெற்றது.
இந்த பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் யர்கன் லிவர்பூலுக்கு நிர்வாகியாக வந்த புதிதில் அந்த அணியிடம் காணப்பட்ட சுறுசுறுப்பு தற்பொழுது இல்லை என்று கூறும் காற்பந்து விமர்சகர்கள் ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தில் சற்று புத்துயிர் பெற்றதுபோல் விளையாடியதாகக் கூறுகின்றனர்.
லெஸ்டரை ஓரங்கட்டி இரண்டாம் நிலைக்கு முன்னேறிய நியூகாசல்
லெஸ்டர்: ஒரு பெனால்டி வாய்ப்பு, பின்னர் தலையால் முட்டி லெஸ்டருக்கு எதிராக கோல் என தனது அளவில்லா திறமையைக் காட்டிய நியூகாசல் தாக்குதல் ஆட்டக்காரர் ஜோலின்டன் லெஸ்டரை ஓரங்கட்டி தரவரிசைப் பட்டியலில் தமது அணி இரண்டாம் நிலைக்கு முன்னேற உதவினார்.
ஆட்டம் தொடங்கிய 86 வினாடியிலேயே ஜோலின்டனை தப்பாட்டம் மூலம் வீழ்த்தி நியூகாசலுக்கு கோல் போடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் லெஸ்டரின் டேனியல் அமார்டே.
அந்த வாய்ப்பை நியூகாசலின் கிறிஸ் உட்ஸ் கோலாக்கினார். பின்னர் முதல் பாதி ஆட்டம் முடியும் முன்னரே நியூகாசலின் மிக்குவேல் அல்மிரான் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் அணியின் இரண்டாவது கோலைப் போட்டார்.
பின்னர் ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பில் கிடைத்த பந்தை எம்பிக் குதித்து தலையால் முட்டி நியூகாசலின் மூன்றாவது கோலைப் போட்டு தமது அணி லெஸ்டரை மீளாத் துயரில் ஆழ்த்தினார்.
நியூசிலாந்து நாட்டு வீரரான ஜோலின்டன் நியூகாசலுக்கு வழக்கமாக ஆடும் கேலம் வில்சன் நோய் காரணமாக விளையாட முடியாமல் போனதால் நியூகாசலால் களமிறக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

