வாஷிங்டன்: கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு அதிகமானோர் மீண்டும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கிருமிப் பரவலை முற்றிலும் ஒழிக்கும் அணுகுமுறையைப் பின்பற்றிவந்த ஓரே நாடான சீனாவும் போக்கை மாற்றிக்கொண்டுள்ளது, தனது எல்லைகளை மீண்டும் திறந்துவிட்டும் வருகிறது.
இவ்வேளையில் அதிகரித்துவரும் விமானப் பயணங்களுக்குப் போதுமான விமானங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறையைப் போக்க யுனைடெட் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான விமானங்களை வாங்கப் பதிவுசெய்துள்ளன.
ஆனால், விநியோகச் சங்கிலியில் உள்ள நெருக்கடிகளால் புதிய விமானங்களைப் பெற சில ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய விமானங்களின் எண்ணிக்கையே 12,720 என்று 'ஜெஃப்ரீஸ்' முதலீட்டு வங்கி கணித்துள்ளது.
விமானப் பயணங்கள் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து பயணக் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்தது குறித்து மக்கள் பல மாதங்களாக அதிருப்தி தெரிவித்து வந்துள்ளனர். விமானப் பற்றாக்குறை இருப்பதால் அந்தப் பிரச்சினை இப்போதைக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைமை மேம்படுவதற்கு முன்னர் மோசமடையத்தான் செய்யும் என்று சொல்லப்படுகிறது. விமானப் பற்றாக்குறையுடன் எரிவாயு விலைகள் உள்ளிட்ட காரணங்களும் இப்பிரச்சினைக்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது சுற்றுப்பயணத் துறை முடங்கிப் போனதால் பயன்படுத்தப்படாத பல விமானங்களை நிறுவனங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாலைவனங்களில் வைத்திருந்தன. இதுவும் விமானப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.