$268 பில்லியன் இழந்த முதல்
நபர் எலோன் மஸ்க்
நியூயார்க்: தமது மொத்த சொத்திலிருந்து 200 பில்லியன் அமெரிக்க டாலர் (S$268 பில்லியன்) இழந்துள்ளார் டெஸ்லா தலைமை நிர்வாகி திரு எலோன் மஸ்க். இதன்மூலம் திரு மஸ்க், இவ்வளவு பெரிய தொகையை இழந்த முதல் நபராவார்.
அமேசான்.காம் நிறுவனத்தின் ஜெஃப் பெசோசுக்குப் பிறகு, தனிப்பட்ட சொத்து அடிப்படையில், ஆக அதிகமான தொகையை திரு மஸ்க் ஈட்டினார்.
தனிப்பட்ட சொத்து அடிப்படையில் $268 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஈட்டிய முதல் நபர் எனும் பெருமை அவரைச் சேரும். ஆனால் டெஸ்லா கார்களுக்குப் போட்டியாகப் பல நிறுவனங்கள் களமிறங்கி மின்சார கார்களை உற்பத்தி செய்வதால் டெஸ்லாவின் பங்குகளின் விலை சரிந்தன. இதனால் திரு மஸ்க்கிற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கம்போடிய தீச்சம்பவம்:
மின் கோளாறு காரணம்
பொய்பெட்: கம்போடியாவில் உள்ள சூதாட்டக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 26 பேர் மாண்டனர். இந்நிலையில், அந்தச் தீச்சம்பவத்துக்கு மின் கோளாறு காரணம் என்று கம்போடிய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். தீக்கிரையான சூதாட்டக்கூடத்தின் படிக்கட்டுகளிலும் அறைகளிலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் காலமானார்
வத்திக்கன் நகரம்: முன்னாள் போப்பாண்டவரான 16வது பெனடிக்ட் காலமானார். அவருக்கு 95 வயது. இவருக்கு முன்பு கடந்த 600 ஆண்டுகளில் போப்பாண்டவர்களாக இருந்த அனைவரும் பதவியில் இருந்தபோதே மாண்டனர். அவர்கள் யாரும் பதவி விலகவில்லை. கடந்த 600 ஆண்டுகளில் இவர்தான் பதவி விலகிய முதல் போப்பாண்டவர். ஜெர்மனியைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் ஜோசஃப் ரெட்ஸிங்கர். 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகியதிலிருந்து அவர் வத்திக்கன் நகரில் வசித்து வந்தார்.

