சிட்னி: சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றிலிருந்து ஆஸ்திரேலியா செல்வோர் தங்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படாததை உறுதிப்படுத்த பயணம் மேற்கொள்வதற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். பயணம் மேற்கொள்வதற்கு முன்பு 48 மணிநேரத்துக்குள் பரிசோதனையை மேற்கொண்டிருக்கவேண்டும்.
இம்மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இந்த விதிமுறை நடப்புக்கு வரும். இது ஒரு தற்காலிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் கூறினார்.
சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றிலிருந்து கனடா செல்லும் பயணிகளுக்கும் வரும் ஐந்தாம் தேதியிலிருந்து இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலை முற்றிலும் அழிக்கும் போக்கை அண்மையில் சீனா திடீரெனக் கைவிட்டது. அதையடுத்து அந்நாட்டில் அடையாளம் காணப்படாத மோசமான கொவிட்-19 கிருமி வகை பரவிக்கொண்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை முடுக்கிவிட்டுள்ளன.
சீனாவில் கிருமிப் பரவல் நிலவரத்தைக் கணிக்கப் போதுமான தகவல்கள் வழங்கப்படாதது இதற்கு முக்கியக் காரணம். தகவல்களை வழங்குமாறு அண்மையில் உலகச் சுகாதார நிறுவனமும் சீனாவைக் கேட்டுக்கொண்டது.
இதுவரை இந்தியா, ஜப்பான் தென்கொரியா, அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி உள்ளிட்ட சுமார் 12 நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன.
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டாயப் பரிசோதனை விதிமுறை

