ஏஎஃப்எஃப் மிட்சுபிஷி களத்தில் சிங்கப்பூர்-மலேசியா மோதல்
கோலாலம்பூர்: தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான ஏஎஃப்எஃப் மிட்சுபிஷி கிண்ணப் போட்டியின் 'பி' பிரிவு ஆட்டத்தில் இன்று சிங்கப்பூரும் மலேசியாவும் மோதவுள்ளன. ஆட்டம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் இன்றிரவு நடைபெறும்.
ஏஎஃப்எஃப் போட்டியின் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் தங்கள் சொந்த மண்ணில் மோதியபோது வென்றதில்லை.
ஏஎஃப்எஃப் போட்டிகளில் இதுவரை இருமுறை மலேசியாவை வென்றிருக்கிறது சிங்கப்பூர். மலேசியா மூன்று முறை வெற்றிகண்டிருக்கிறது. மூன்று முறை ஆட்டம் சமநிலையில் முடிந்திருக்கிறது.
எனினும், மலேசியாவுடன் மோதிய கடந்த மூன்று நட்புமுறை ஆட்டங்களில் சிங்கப்பூர் இருமுறை வென்றது, ஒருமுறை சமநிலை கண்டது. இன்றைய ஆட்டத்தை வென்றால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிடும் சிங்கப்பூர்.
ஏமாற்றம் தரும் ஸ்பர்ஸ், செல்சி
நாட்டிங்ஹம்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ள நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது செல்சி (படம்). இதனால், லீக் பட்டியலின் முதல் நான்கு இடங்களுக்குள் முடிக்கும் செல்சியின் முயற்சிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு லீக் ஆட்டத்தில் எதிர்பாராவிதமாக ஆஸ்டன் வில்லாவிடம் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது டொட்டன்ஹம் ஹாட்ஸ்பர். ஸ்பர்ஸ், செல்சி இரு குழுக்களும் இதுவரை இந்தப் பருவம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யத் தவறியுள்ளன.

