சற்று மீண்டெழுந்த வெஸ்ட் ஹேம்
லீட்ஸ்: சென்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் சிறப்பாக விளையாடி எதிர்பார்ப்புகளை முறியடித்த வெஸ்ட் ஹேம் யுனைடெட் இந்தப் பருவத்தில் சிக்கல்களை எதிர்நோக்கி வந்துள்ளது. எனினும், ஆகக் கடைசி நிலவரப்படி லீக் பட்டியலில் 17வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் ஹேம், லீட்ஸ் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் சமநிலை கண்டு சரிவை நிறுத்திக்கொண்டது.
ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் முன்னுக்குச் சென்றது லீட்ஸ். அதற்குப் பிறகு 45, 46வது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டு முன்னுக்குச் சென்றது வெஸ்ட் ஹேம்.
70வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது லீட்ஸ்.
இந்தப் பருவத்தில் லீட்சும் சற்று தடுமாறி வந்துள்ளது. விறுவிறுப்பாக ஆடியபோதும் தற்காப்பு ஆட்டத்தில் மிகவும் பலவீனமாக இருந்துள்ளது.
எஃப்ஏ கிண்ணப் போட்டியின் மூன்றாம் சுற்றில் நாளை பிரென்ட்ஃபர்டைச் சந்திக்கும் வெஸ்ட் ேஹம், நாளை மறுநாள் கார்டிஃப் சிட்டியுடன் மோதவுள்ளது லீட்ஸ்.
பெருமூச்சு விட்டுக்கொண்ட ஸ்பர்ஸ்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் கிறிஸ்டல் பேலஸ் குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் வென்று பெருமூச்சு விட்டுக்கொண்டுள்ளது சற்று தத்தளித்துவந்த டொட்டன்ஹம் ஹாட்ஸ்பர் (படம்).
நேற்று முன்தினம் பின்னிரவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஸ்பர்ஸ் நட்சத்திரம் ஹேரி கேன் இரண்டு கோல்களைப் போட்டார். ஸ்பர்ஸின் இன்னொரு நட்சத்திரமான தென்கொரிய வீரர் சொன் ஹியோங் மின்னும் ஒரு கோலைப் போட்டார். மற்றொரு கோலைப் போட்டவர் மேட் டொஹர்ட்டி.
இந்த வெற்றியின் மூலம் ஸ்பர்ஸ் லீக் பட்டியலில் முன்னேறவில்லை. ஆனால், தடுமாற்றத்தைச் சரிசெய்யப் போதுமான தன்னம்பிக்கையை அளிக்கக்கூடி வெற்றி இது.

