பெய்ஜிங்: சீனாவில் கொவிட் -19 கொள்ளைநோய் வேகமாகப் பரவி வரும் நிலையில் அமெரிக்கா மேம்பட்ட தடுப்பூசி மருந்துகளை கொடுத்து உதவ முன்வந்துள்ளது. ஆனால், அதை சீனா தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் அதிகரித்துவரும் புதிய வகை கொரோனா கிருமிகள் அந்நாட்டு பொருளியலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அக்கறையில் அமெரிக்கா தனிப்பட்ட முறையில் மொடர்னா தடுப்பூசி மருந்துகளை தர முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அரசியல் சர்ச்சைகளைத் தவிர்க்கும் விதமாக இதை நேரடியாகத் தராமல் மாற்று வழிகளில் தந்து உதவவும் அமெரிக்கா முன்வந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் விளக்கினர்.
மற்றொரு நிலவரத்தில், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலை எதிர்கொள்ள தைவான் முன்வந்தது என்றும் சீனாவிடமிருந்து இதற்கு பதிலில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றிக் கூறும் தைவானின் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் டாக்டர் விக்டர் வாங், சீனாவுக்கு தான் எவ்வாறு உதவி புரியலாம் என்று கேட்டு சீன அதிகாரிகளுக்கு மின்னியல் தகவல் அனுப்பியதாகவும் ஆனால், இதற்கு அந்நாட்டிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை என்றும் டாக்டர் விக்டர் வாங் விளக்கினார்.

