கோத்தா கினபாலு: சாபா பாரிசான் நேஷனல் தனது ஆதரவை விலக்கிக்கொண்டதைத் தொடர்ந்து சாபா மாநில அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது.
சாபாவில் கடந்த 27 மாதங்களாக கபுங்கான் ரக்யாட் சாபா (ஜிஆர்எஸ்), பாரிசான் நேஷனல் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில், தனது கட்சி அளித்து வந்த 17 பேரின் ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக சாபா பாரிசான் நேஷனல் தலைவர் புங் மொக்தார் ராடின் நேற்று முன் தினம் இரவு அறிவித்தார்.
"பிரதான பெர்சத்துவில் இருந்து சாபா பெர்சத்து விலகியதால், முதலமைச்சர் ஹாஜிஜி அப்பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்," என்றார் அவர்.
79 தொகுதிகளைக் கொண்ட சாபாவில் ஆட்சி அமைக்க 40 இடங்கள் தேவை. முந்திய தேர்தலின்போது, 29 இடங்களை வென்றிருந்த ஜிஆர்எஸ் 17 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாரிசான் நேஷனலுடன் கூட்டணி சேர்ந்தது. ஹாஜிஜி நூரை முதலமைச்சராக கொண்டு அந்தக் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வந்தது.
தற்போது, ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள பாரிசான், முக்கிய எதிர்க்கட்சியான வாரிசானுடன் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசான் (18), பாரிசான் (17) கூட்டணி 36 இடங்களை மட்டுமே கொண்டிருந்தாலும் மற்ற சிறிய கட்சிகள் மூலம் தேவையான பெரும்பான்மையை திரட்ட பாரிசான் முயற்சிக்கும்.
ஆனால், இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்க போவதில்லை என்று பக்கத்தான் ஹரப்பான் (7) கூறியுள்ளது. அதேசமயம் வாரிசானும் (29), பக்கத்தானும்கூட (7) 36 பேரின் ஆதரவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், ஒற்றுமை அரசாங்கம் அமைக்க பக்கத்தான் ஹரப்பான் முன்மொழிந்துள்ளது. சாபா சட்டமன்றத்தைக் கலைப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் அதனால், பக்கத்தானின் ஏழு சாபா உறுப்பினர்கள் முதலமைச்சர் ஹாஜிஜிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, பாரிசானில் அங்கம் வகிக்கும் அம்னோவின் 5 உறுப்பினர்கள் ஹாஜிஜிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதோடு, சாபா அம்னோ தலைவர் பதவியில் இருந்து புங் மோக்தார் விலகவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

