கோத்தா கினபாலு: சாபா மாநிலத்தின் முதல்வராக யாரை நியமிக்க வேண்டும் என்பதை அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
கடந்த 27 மாதங்களாக சாபாவை ஆட்சி செய்துவந்த மாநில கூட்டணி அரசுக்கு இனி ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று சாபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் அண்மையில் தெரிவித்தார். தேசிய முன்னணியின் ஆதரவு இல்லாமல் சாபா அரசு கவிழ்ந்தது.
இந்நிலையில், சாபாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண, இந்தோனீசியாவில் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்த அன்வார், அங்கிருந்து புறப்பட்டு சாபா தலைநகர் கோத்தா கினபாலுவை நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார்.
"சாபாவில் நிலைமை மேம்பட்டு வருகிறது. சாபாவுக்கு மிகவும் பொருத்தமான, சிறப்பான அரசியல் அணுகுமுறையைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தும் நோக்கில் அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடியும் நானும் சாபாவுக்கு வந்துள்ளோம்," என்றார் அன்வார்.
இதற்கிடையே, அம்னோவின் பொதுக் கூட்டம் இவ்வாரம் நடைபெறுகிறது.
அண்மையில் நடந்து முடிந்த மலேசியப் பொதுத் தேர்தலில் அக்கட்சி குறைவான இடங்களையே வென்றது. இருப்பினும், கூட்டணி அரசில் அது அங்கம் வகிக்கிறது. கட்சியை வலுப்படுத்த புதிய அணுகுமுறையை அமைப்பதில் அம்னோ தலைவர் ஸாஹிட் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோவின் கட்சித் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற இருக்கிறது. அன்வார் தலைமையிலான அரசாங்கத்தில் அம்னோ இடம்பெறுவது அக்கட்சியைச் சேர்ந்த சிலரை சினம் அடையச் செய்துள்ளது. எனவே, வேறொருவர் தலைவராகப் பொறுப்பேற்று அம்னோவை வழிநடத்த வேண்டும் என்று குரல்கள் எழக்கூடும் என்று நம்பப்படுகிறது.