செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8254907c-fdc8-4adc-84f4-f0d865cf2901
-

வெளிநாட்டு ஊழியர்களின் பக்கம் திரும்பியது மலேசியாவின் பார்வை

கோலாலம்பூர்: மலேசியாவின் முக்கிய துறைகள், ஊழியர் பற்றாக்குறையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியில் அந்நாடு தீவிரமாக இறங்கியுள்ளது.

ஊழியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சயீஃபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் நேற்று தெரிவித்தார்.

மலேசிய நிறுவனங்கள் 15 நாடுகளிலிருந்து ஊழியர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையில் வரம்பு இருக்காது என்றும் அவர் கூறினார். இந்த விதிவிலக்கு தற்காலிகமானது என்றும் இது ஓராண்டுக்கு மட்டுமே நடப்பில் இருக்கும் என்றும் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க மட்டுமே இந்தப் புதிய விதிமுறையைப் பயன்படுத்தலாம் என்றும் திரு சயீஃபுதீன் தெரிவித்தார்.

எல்லையில் 6 பேரைச் சுட்டுக் கொன்ற தாய்லாந்து ராணுவம்

பேங்காக்: தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஆறு பேரை தாய்லாந்து ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். தாய்லாந்து, மியன்மார், லாவோஸ் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிக்கு அருகில் தாய்லாந்து ராணுவ வீரர்களுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.

நேற்று முன்தினம் அதிகாலை மியன்மாரிலிருந்து 15 முதல் 20 பேர் எல்லையைக் கடந்து தாய்லாந்துக்குள் நுழைந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது.

துப்பாக்கிச் சூட்டில் மாண்டவர்களின் பைகளைச் சோதித்துப் பார்த்தபோது அதில் போதைப்பொருள், துப்பாக்கிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பறவைக் காய்ச்சல்: ஜப்பானில்

10 மில்லியன் பறவைகள் அழிப்பு

தோக்கியோ: ஜப்பானில் இதற்கு முன் இல்லாத அளவில் மிக மோசமான பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அங்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. மியாஸாக்கி மாநிலத்தில் உள்ள ஒரு முட்டைப் பண்ணையில் இருந்த கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பண்ணையில் ஏறத்தாழ 100,000 கோழிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஊழல்: பாப்புவா ஆளுநர் கைது

ஜகார்த்தா: லஞ்சம் வாங்கி உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களை வழங்கிய குற்றத்துக்காக இந்தோனீசியாவின் பாப்புவா மாநிலத்தின் ஆளுநரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டுமான நிறுவனத்திடமிருந்து லுகாஸ் எனெம்பே ஒரு பில்லியன் ரூப்பியா (S$85,542.67) லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் ஈரானிய அதிபரின் மகளுக்கு ஐந்தாண்டுகள் சிறை

துபாய்: பெண்கள் தலையங்கி அணிவது தொடர்பாக அண்மையில் ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு அளித்து அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, அந்நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானியின் மகளுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.