ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வரலாற்றில் பல மோசமான மனித உரிமை மீறல் செயல்கள் இடம்பெற்றிருப்பதை ஜோக்கோவி என்றழைக்கப்படும் அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ ஒப்புக்கொண்டுள்ளார். 1965, 1966ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த சில மோசமான சம்பவங்கள் அவற்றில் அடங்கும்.
இந்தோனீசியாவில் 1965ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 500,000 பேர் உயிரிழந்தனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கணித்துள்ளனர். அந்த காலகட்டத்தில் அந்நாட்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டது. ஜெனரல் பதவியில் இருந்த சுகார்த்தோ அதிபராகப் பொறுப்பேற்றார். கம்யூனிஸ்ட்டுகள் என்று சந்தேகிக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
"தெளிவான சிந்தனையுடனும் மனசாட்சியுடனும் தேசத்தின் தலைவராக இருக்கும் நான், பல நிகழ்வுகளில் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை ஒப்புக்கொள்கிறேன்," என்றார் திரு விடோடோ.
"அத்தகைய மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமது ஆட்சி காலத்திற்கு முன்பு 1965ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நேர்ந்த மேலும் 11 மனித உரிமை மீறல் செயல்களைத் திரு விடோடோ குறிப்பிட்டார். 90களின் பிற்பகுதியில் திரு சுகார்த்தோவின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் கடத்தப்பட்டது, கொல்லப்பட்டது அத்தகைய செயல்களில் அடங்கும்.
நியாயமான முறையில் சட்டரீதியான அம்சங்களைக் கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டுத் தரத் தமது அரசாங்கம் முயற்சி செய்யும் என்று திரு விடோடோ கூறினார்.

