அதிரடி ரேஷ்ஃபர்டால் உயரும் மான்செஸ்டர் யுனைடெட்
மான்செஸ்டர்: இங்கிலாந்தின் 'லீக் கப்' என்றழைக்கப்படும் இஎஃப்எல் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். போட்டியின் காலிறுதியாட்டத்தில் இங்கிலாந்து காற்பந்தின் தரவரிசையில் மூன்றாவது நிலையில் இருக்கும் 'லீக் ஒன்'னைச் சேர்ந்த சார்ல்ட் ஆத்லெட்டிக்கை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது யுனைடெட்.
ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்டார் யுனைடெட் நட்சத்திரம் மார்க்கர்ஸ் ரேஷ்ஃபர்ட் (படம்). கடந்த சில வாரங்களாக அபாரமாக ஆடிவரும் ரேஷ்ஃபர்டின் அதிரடிப் பயணம் நீண்டுகொண்டே போகிறது. யுனைடெட்டின் மற்றொரு கோலைப் போட்டவர் பிரேசிலிய நட்சத்திரம் ஆன்டனி.
மீண்டுவந்த நியூகாசல் யுனைடெட்
நியூகாசல்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் எதிர்பாரா விதமாக தோல்வியடைந்த நியூகாசல் யுனைடெட் அதற்கு சில நாள்களுக்குப் பிறகே இஎஃப்எல் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதிச் சுற்றில் லெஸ்டர் சிட்டியை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது நியூகாசல். டேன் பர்ன், ஜோவெலின்டன் ஆகியோர் நியூகாசலின் கோல்களைப் போட்டவர்கள்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தபடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்து வந்துள்து நியூகாசல். லீக் கிண்ணத்தை வெல்வதற்கான போட்டியில் நியூகாசல் இடம்பெறக்கூடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
சவூதி அரேபிய செல்வந்தர்களால் வாங்கப்பட்ட நியூகாசல் பெரிய குழுவாக உருவெடுக்க புதிய விளையாட்டாளர்களைத் தருவிக்க அதிகம் செலவு செய்துள்ளது. எனினும், இதர சில பணக்கார குழுக்களைப் போல் அளவுக்கதிகமாக செலவு செய்யாமல் தேவையான விளையாட்டாளர்களை நன்கு அடையாளம் கண்டு வாங்கியுள்ளது உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நியூகாசல்.
ஏஎஃப்எஃப் கிண்ணம்: ஆற்றலை நினைவூட்டிய தாய்லாந்து
பேங்காக்: தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான ஏஎஃப்எஃப் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது தாய்லாந்து. அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் மலேசியாவிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த தாய்லாந்து இரண்டாவது ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வென்றதால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
முதல் சுற்றில் சிங்கப்பூரை 4-1 எனும் கோல் கணக்கில் வென்ற மலேசியாவின் கனவுப் பயணம் முடிந்தது. ஏஎஃப்எஃப் கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ள தாய்லாந்தை சாய்ப்பது பல அணிகளுக்கு சிரமமாக இருந்து வருகிறது.
இறுதிச் சுற்றில் தாய்லாந்தும் வியட்னாமும் மோதும். இறுதிச் சுற்றின் முதல் ஆட்டம் நாளை நடைபெறும். வரும் திங்கட்கிழமையன்று இரண்டாம் ஆட்டம் நடைபெறும்.

