உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் கடுமையாக விளையாடியபின் வீரர்கள் பொதுவாக சிறிது நாள் கழித்தே தங்கள் குழுவில் திறமையுடன் ஆட முற்படுவர். ஆனால், மான்செஸ்டர் யுனைடெட் வீரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் அல்லர். உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு அவர் தமது குழுவுக்காக இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் கோல் போட்டு இந்தக் காற்பந்து பருவத்தில் தற்போதைய நிலையில் 15 கோல்கள் போட்டுள்ளார். அவர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பின் தமது குழுவுக்காக விளையாடிய மூன்று விதமான போட்டிகளில் தான் விளையாடிய ஆறு ஆட்டங்களில் ஏழு கோல்கள் போட்டுள்ளார்.
இதனால், யுனைடெட் அணி பிரிமியர் லீக்கில் முதல் நான்கு நிலையில் உள்ளது. அத்துடன், எஃப்ஏ கிண்ணப் போட்டியின் நான்காவது சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் லீக் கிண்ணப் போட்டியின் அரை யிறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

