சோல்: தென்கொரியாவில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 158 பேர் மரணமடைந்த சம்பவத்தில் 24 அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று சிறப்பு காவல்துறை புலன்விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
அந்த அதிகாரிகளின் பெயர்களையும் குழு குறிப்பிட்டது. சம்பவம் குறித்து தீர விசாரித்த பின்னர் நேற்று அந்தக் குழு தனது அறிக்கையை வெளியிட்டது.
காவல்துறை, உள்ளூர் மாவட்ட அலுவலகம், தீயணைப்புத் துறை, சோல் பெருநகர நிர்வாகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களது கடமையைச் சரிவர செய்யத் தவறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆக அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் குழு தனது அறிக்கையில் வேதனையை வெளிப்படுத்தி உள்ளது.
24 அதிகாரிகளில் 6 அதிகாரிகள்மீது கடுமையான குற்றச்சாட்டுகளை குழு முன்வைத்து உள்ளது.
சம்பவம் நிகழ்ந்த யோங்சான் மாவட்டத்தின் முன்னாள் தலைமைக் காவல்துறை அதிகாரியும் மாவட்ட நிர்வாக அலுவலகத்தின் தலைமை அதிகாரியும் அந்த 6 பேரில் அடங்குவர்.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுள் ஒருவர் ஏற்கெனவே தமது உயிரை மாய்த்துக்கொண்டார்.
அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற ஹாலோவீன் திருவிழாக் கொண்டாட்டங்களில் கிட்டத்தட்ட 100,000 பேர் பங்கேற்றபோது கூட்டத்தினரிடையே நெரிசல் ஏற்பட்டது. சுரங்க ரயில் பாதை அருகே இருந்த மிகவும் குறுகிய சந்தில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு சென்றதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நசுங்கி மாண்டனர். மரண எண்ணிக்கை அடுத்தடுத்த நாள்களில் அதிகரித்து 158ஐத் தொட்டது.
இரவுநேரக் கொண்டாட்டங் களின் பாதுகாப்பு நடவடிக்கை யில் 140 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களில் பலருக்கு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லை என்று சம்பவம் நடந்த பின்னர் கூறப்பட்டது.
சம்பவத்திற்காக தென்
கொரிய அதிபர் யூன் சக்-இயோல் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
சம்பவத்திற்குக் காரணமான வர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்று அப்போது அவர் உறுதி தெரிவித்திருந்தார்.
கூட்டநெரிசலில் 158 பேர் மரணம்: விசாரணை அறிக்கை வெளியீடு

