கோலாலம்பூர்: மலேசியாவின் அம்னோ கட்சிப் பேராளர்கள் நேற்று வருடாந்திர கூட்டத்தை நடத்தினார்கள். அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்னோவின் கட்சித் தேர்தல் வரும் மே மாதம் 19ஆம் தேதிக்கு முன்பாக நடக்க வேண்டும் என்றும் அத்தேர்தலில் கட்சியின் தலைவர் பதவிக்கும் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டி இருக்காது என்றும் அந்தத் தீர்மானம் தெரிவிக்கிறது.
கோலாலம்பூரில் கட்சித் தலைமையகத்தில் நடந்த வருடாந்திர கட்சிக் கூட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்றினர்.
போட்டி இராது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், அம்னோவின் தலைவராக இப்போது இருக்கும் ஸாஹிட் ஹமிடி, துணைத் தலைவராக இருக்கும் முகம்மது ஹசான் இருவரையும் எதிர்த்து மே மாத கட்சித் தேர்தலில் யாரும் போட்டி போட முடியாது.
பிரதமர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் ஸாஹிட் இப்போது துணைப் பிரதமராக இருக்கிறார். முகம்மது ஹசான் தற்காப்பு அமைச்சராக இருக்கிறார்.
என்றாலும் மே மாதம் நடக்க இருக்கும் கட்சித் தேர்தலில் கட்சியின் மூன்று உதவித் தலைவர்கள், பிரிவு தலைவர்களுக்கான போட்டி இடம்பெறும்.
இதனிடையே, தலைவர் பதவிக்கும் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டி இருக்கக் கூடாது என்று கூறும் தீர்மானத்தை 90 விழுக்காட்டு பிரமுகர்கள் ஆதரித்ததாகவும் 10 விழுக்காட்டினர் மட்டுமே அதை எதிர்த்ததாகவும் திரெங்கானு மாநில அம்னோ பொது உறவுத் தலைவர் அகம்மது சையது கூறி உள்ளார்.
மலேசியாவில் இவ்வாண்டு ஆறு மாநிலங்களுக்குத் தேர்தல்நடக்கவிருக்கிறது.
அதற்கு முன்னதாக அம்னோ தன்னுடைய பலத்தை ஒன்றுதிரட்ட அந்தத் தீர்மானம் உதவும் என்றார் அவர்.

