செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
90971177-04ff-44bb-8c78-593cc5651aaa
-

சீனக் கப்பலைக் கண்காணிக்கும் இந்தோனீசியப் போர்க்கப்பல்

ஜகார்த்தா: சீனாவின் கடலோர காவல்படைக் கப்பல் ஒன்றைக் கண்காணிப்பதற்காக வடக்கு நட்டுரா கடல் பகுதிக்குப் போர்க்கப்பல் ஒன்றை இந்தோனீசியா அனுப்பி இருக்கிறது. கடல்வளம் அதிகமாக இருக்கும் அந்தப் பகுதியில் சீனக் கப்பல் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கடல் பகுதியை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. சீனாவின் சிசிஜி 5901 என்ற கடலோரக் காவல்படைக் கப்பல், கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதல் அந்தப் பகுதியில் திரிந்துவருவதாக கப்பல் கண்காணிப்புத் தகவல்கள் மூலம் தெரியவந்து உள்ளது என்று இந்தோனீசிய ஆழ்கடல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. அந்தக் கப்பலைக் கண்காணிக்க போர்க்கப்பலும் சுற்றுக்காவல் விமானமும் ஆளில்லா வானூர்தியும் அனுப்பப்பட்டுள்ளது என்று இந்தோனீசியக் கடற்படைத் தலைவர் முகம்மது அலி கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.

ஈரானில் பிரிட்டிஷ் ஈரானியர் தூக்கில் போடப்பட்டார்

டெஹ்ரான்: பிரிட்டிஷ் ஈரானியரான அலிரெசா அக்பரி (படம்) என்பவரை, பிரிட்டனுக்கு வேவு பார்த்ததாகக் கூறி ஈரான் தூக்கில் போட்டுவிட்டது. முன்னதாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தது. இதனை ஈரானின் மிசான் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அக்பரி, ஈரானின் தற்காப்பு துணை அமைச்சராக பணியாற்றியவர். அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என பிரட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தி வந்தார்.

பிரிட்டிஷ் அரசரை நோக்கி முட்டை வீசியவருக்கு அபராதம் விதிப்பு

லண்டன்: பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்ல்ஸ்மீது முட்டை வீசிய ஆடவருக்கு 100 பவுண்டு (S$161) அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், பொது ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றதற்காக ஹேரி மே, 21, என்ற அந்த ஆடவர் மேலும் 85 பவுண்டு செலுத்தவும் உத்தரவிடப் பட்டது. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி சமூகத் தலைவர்களைச் சந்திக்கவும் புதிய சீக்கியக் கோவிலைத் திறந்துவைக்கவும் சென்றபோது அரசர்மீது முட்டை வீசியதை மே ஒப்புக்கொண்டார். ஆனாலும், முட்டை அரசர்மீது படாமல் அவருக்கு அருகிலேயே விழுந்தது.

மியன்மார் ராணுவத் தாக்குதலில் குழந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு

யங்கூன்: மியன்மாரின் கிழக்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண், அவரது மூன்று வயதுக் குழந்தை உட்பட ஐவர் கொல்லப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹிபாப்புன் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்கள்மீது நான்கு போர் விமானங்கள் எட்டுக் குண்டுகளை வீசியதாக கெரன் போராளி அமைப்பு தெரிவித்தது. இத்தாக்குதலில் நால்வர் காயமுற்றதாகவும் சொல்லப்பட்டது. கடந்த 2021 பிப்ரவரி மாதம் மியன்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பிறகு அங்கு 2,700க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுவிட்டதாக உள்ளூரைச் சேர்ந்த கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்தது.