செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f2364a1f-91b5-447c-a081-a3d3b24c1a2d
-

சீனா-ஹாங்காங் அதிவிரைவு ரயில் பாதை மீண்டும் திறப்பு

ஹாங்காங்: சீனாவுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான அதிவிரைவு ரயில் சேவை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. சீனாவுக்குச் செல்லும் பயணிகள் இனி தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து அங்கு கிட்டத்தட்ட 60,000 பேர் மருத்துமனைகளில் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் காய் நகர்த்தல்; பஞ்சாப் சட்டமன்றம் கலைந்தது

லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் காய் நகர்த்தல் காரணமாக அந்நாட்டிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்றம் கலைந்தது. பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக இம்ரான் கான் இவ்வாறு செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாண்டான் இன்டா வெடிகுண்டு தாக்குதல்: தம்பதியர் கைது

அம்பாங்: மலேசியாவின் அம்பாங் நகரில் உள்ள பாண்டான் இன்டா பகுதியில் அண்மையில் கார் மேல் வைக்கப்பட்டிருந்த பொட்டலம் வெடித்ததில் உணவகத்தில் உணவு பரிமாறுபவர் ஒருவர் மாண்டார்.

இந்நிலையில், வெடிகுண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆடவருக்கு 33 வயது. அவரது மனைவிக்கு 30 வயது. அவர்கள் அம்பாங் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படுவர். அவர்கள் மீது இன்று குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இஸ்‌ரேலிய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு, ஆர்ப்பாட்டம்

டெல் அவிவ்: இஸ்ரேலின் நீதித்துறையில் மாற்றங்களைக் கொண்டு வர அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட 80,000 இஸ்‌ரேலியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றங்கள் மூலம் நாட்டின் நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்க நெட்டன்யாஹுவின் அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.