செய்திக்கொத்து

3 mins read
0702996d-ba90-4b3b-833e-f84db988b64d
-

வரலாறு படைத்தது இந்திய அணி

திருவனந்தபுரம்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முந்நூறு ஓட்டங்களுக்கும் மேலான வித்தியாசத்தில் வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இலங்கை அணிக்கெதிராக திருவனந்த புரத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பந்தடித்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்க வீரர் ஷுப்மன் கில்லும் (116) நட்சத்திர வீரர் விராத் கோஹ்லியும் (166*) சதம் விளாசினர். அதன்பின் பந்தடித்த இலங்கை அணி 73 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் பறி கொடுத்து, 317 ஓட்ட வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலிரு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

2008ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி 290 ஓட்ட வித்தி யாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இருந்ததே அதிக ஓட்ட வித்தியாச வெற்றி என்னும் சாதனை இதற்கு முன் வரை இருந்தது.

ஆர்சனல் கோல்காப்பாளரைத் தாக்கிய எதிரணி ரசிகர்

லண்டன்: வடக்கு லண்டனில் நேற்று முன்தினம் நடை பெற்ற பிரிமியர் லீக் ஆட்ட முடிவில் ஆர்சனல் கோல் காப்பாளரை காற்பந்து ரசிகர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் போட்டியில் டோட்டன் ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 2-0 என்னும் கோல் வித்தி யாசத்தில் ஆர்சனல் தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ஆர்சனல் கோல் காப்பாளர் ஆரோன் ராம்ஸ்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஸ்பர்ஸின் ஆட்டக்காரர்கள் பலரது கோல் முயற்சியை அவர் திறம்படத் தடுத்தார். ஆட்டம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டபோது ஸ்பர்ஸின் பிரேசிலிய ஆட்டக்காரர் ரிச்சர்லிசன், ஆர்சனல் கோல் காப்பாளர் ராம்ஸ்டேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஸ்பர்ஸ் ஆதரவாளரான ரசிகர் ஒருவர், திடீரென்று விளம்பரப் பலகை மீது ஏறிக் குதித்து திடலுக்குள் புகுந்ததோடு ராம்ஸ்டேலின் பின்னால் உதைத்துவிட்டார். தாம் தாக்கப்பட்டதை ராம்ஸ்டேல் உறுதிப்படுத்தினார். "ரசிகர் ஒருவர் பின்னாலிருந்து உதைத்தார். விளையாட்டுப் போட்டிக்காக தாக்கப்படுவது வெட்கக்கேடானது. இது ஒரு கசப்பான அனுபவம்," என்றார் அவர்.

உல­கக் கிண்­ணப் போட்டி தொடங்­கு­வ­தற்கு முன்பு இருந்தே சரி­யாக விளை­யா­டாத ஸ்பர்ஸ், கிரிஸ்­டல் பேலசுக்கு எதி­ரான அதன் முந்­தைய லீக் ஆட்­டத்­தில் 4-0 எனும் கோல் கணக்­கில் வென்று தன்­னம்­பிக்­கையை மீட்­டுக்­கொண்­டது. இருப்பினும் இந்தப் போட்டியில் அது மீண்டும் சறுக்கியது. லண்­டனின் வடக்­குப் பகு­தி­யைச் சேர்ந்த ஆர்சனல்-ஸ்பர்ஸ் குழுக்­கள் பரம வைரி­கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை பெற்ற வெற்றி, இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஆர்சனலுக்கு உதவியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோல் காப்பாளர் ராம்ஸ்டேல் என்று ஊடகங்கள் புகழ்கின்றன.

சூப்பர் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது பார்சிலோனா

மட்ரிட்: ஸ்பானிய சூப்பர் கிண்ண வெற்றியாளராக பார்சி லோனா அணிக்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மட்ரிட்டை அது 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தியது. ரியல் மட்ரிட் அணியினர் செய்த மூன்று தவறுகளும் அதற்கு சாதகமாக அமைந்தன. மோசமான தோல்வியைத் தவிர்க்க இரண்டாம் பாதியில் மட்ரிட் அணியினர் பீதியுடன் ஆடினர்.