கோலாலம்பூர்: சாபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், கட்சி தாவிய பிறகும் அவர்களது தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தாமல் அவர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க மலேசிய நாடாளுமன்றம் எடுத்த முடிவை எதிர்த்து சட்ட
ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் முகைதீன் யாசின் நேற்று தெரிவித்தார்.
மலேசியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே திரு முகைதீன் தலைமையிலான பெர்சத்து கட்சி யிலிருந்து விலகி கபுங்கான் ராக்யாட் சாபா கட்சியில் இணைந்து விட்டதாக சம்பந்தப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கட்சி தாவுவது தொடர்பாக தேர்தலுக்கு முன்பு புதிய சட்டத்தை மலேசியா அறிமுகப்படுத்தியது. அதன்படி தேர்தலுக்குப் பிறகு கட்சித் தாவுபவர்கள் தங்கள் நாடாளுமன்றப் பதவியை இழப்பர் என்றும் அவர்களது தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலுக்கு முன்பு அவர்கள் கட்சி மாறினாலோ அல்லது அவர்களது கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இன்னொரு கூட்டணிக்கு
ஆதரவு தெரிவித்தாலோ அவர்
களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்று புதிய
சட்டம் குறிப்பிடுகிறது
இந்நிலையில், முதலில் பெர்சத்துவுடன் கூட்டணியில் இருந்த கபுங்கான் ராக்யாட் சாபா, பொதுத் தேர்தலுக்குப் பிறகு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒருமைப்பாட்டு அரசாங்கத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது. ஆனால் பெர்சத்து கட்சி எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது.
பொதுத் தேர்தலுக்கு முன்பாக வே அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறியதால் அவர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிக்கலாம் என்று நாடாளு மன்ற நாயகர் ஜொஹாரி அப்துல் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு திரு முகைதீன் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்
தலுக்கு முன்பு அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறியதாகக் கூறப்பட்டால் பெர்சத்து கட்சியின் விதிமுறை
களின்படி, அவர்களது உறுப்பியம் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.
கபுங்கான் ராக்யாட் சாபா ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும் அது பெர்சத்து கட்சி நிறுவிய கூட்டணியில் இருக்கும் ஒர் அமைப்பு மட்டுமே என்றும் திரு முகைதீன் தெரிவித்தார்.
எனவே, கபுங்கான் ராக்யாட் சாபாவை அரசியல் கட்சியாக ஏற்க முடியாது என்றும் அரசியல் கட்சிகளுக்கான விதிமுறைகள் அதற்குப் பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், பொதுத் தேர்தலில் அந்த நால்வரும் வெற்றி பெற்றபோது அவர்கள் பெர்சத்து கட்சியில் இருந்ததற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக திரு முகைதீன் தெரிவித்தார்.

