சுலவேசி அருகே நிலநடுக்கம்
சுலவேசி: இந்தோனீசியாவின் சுலவேசி பகுதிகளில் நேற்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 147 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. உயிருடற் சேதம் பற்றியும் அறிவிப்பு இல்லை.
தென்சீனக் கடலில் சீனா பயிற்சி
பெய்ஜிங்: சீனாவின் கடற்படை, தனது வருடாந்திர பயிற்சியைத் தொடங்கிவைக்கும் வகையில் தென்சீனக் கடலில் விமானம்தாங்கிக் கப்பலை ஈடுபடுத்தி அண்மையில் பயிற்சி நடத்தியது.
சீன கடற்படையின் ஷான்டொங் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட ஜே15 போர் விமானங்கள் ஆகாய தற்காப்புப் பயிற்சியில் ஈடுட்டன. எதிரியின் விமானங்களை அவை சமாளித்தன.
விமானிகள் அதிநவீன உத்திப் பயிற்சிகளில் ஈடுபட்டதாக கடற்படை 'விசாட்' பக்கத்தில் இடம் பெற்ற அறிக்கையில் தெரிவித்தது. போர்க்கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிகள் பயிற்சியில் ஈடுபட்டன.
விமான விபத்து பற்றி அதிகாரிகள்
காட்மாண்டு: நேப்பாளத்தில் 30 ஆண்டுகளில் முதன் முதலாக அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் யாரும் உயிர் பிழைக்க இனி வாய்ப்பு இல்லை என்று நேற்று அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்றாலும்கூட இன்னமும் கண்டறியப்படாமல் இருக்கும் பயணியைத் தேடும் பணி தொடர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதுவரை 71 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடைசி ஒருவரைத் தேடும் பணி தொடர்கிறது என்று பொக்காரா என்ற மாவட்டத்தின் உயர் அதிகாரி தெக் பகதூர் கேசி தெரிவித்தார்.
உலகின் ஆக வயதான பெண்மணி மரணம்
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெண் துறவி லூசில் ராண்டன் தனது 118வது வயதில் அமைதியாக மரணம் அடைந்ததாக அவரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். இவர்தான் உலகின் வயதானவர் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் 1904ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி பிறந்த லூசில் ராண்டன், இரண்டு உலகப் போர்களைச் சந்தித்தார். அவர் 1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது கிறிஸ்துவப் பெண் துறவியானார். லூசில் ராண்டன் 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல், பிறகு கொரோனா தொற்று ஆகியவற்றில் இருந்து தப்பிப் பிழைத்தவர்.
பிரிட்டனில் தாதியர் போராட்டம்
லண்டன்: பிரிட்டனில் தாதியர்கள் நேற்று இரண்டு நாள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். அதனால், அரசாங்க சுகாதார சிகிச்சை பெறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்தனர். தாதியர் சென்ற மாதமும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடப்பு ஆண்டில் தங்கள் ஊதியம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டுவிட்டரின் 27 மணி நேர ஏலம்
சான் பிரான்சிஸ்கோ: டுவிட்டர் நிறுவனம் தனது சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் இருந்த நூற்றுக் கணக்கான பொருள்களை இணையம் வழி ஏலத்தில் வாங்கலாம் என்று அறிவிப்பு விடுத்தது.
அந்த 27 மணி நேர ஏலத்தில் காப்பி போடும் சாதனம் தட்டுமுட்டுப் பொருள்கள், சமையல் அறை பொருள்கள், வர்த்தக அடையாள உருவங்கள் முதலான பலவும் விற்கப்பட்டன. டுவிட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார். அது முதல் 7,500 ஊழியர்களை அவர் நீக்கிவிட்டார்.
ஊழியர்களுக்குக் கிடைத்துவந்த பல ஊக்கு விப்புகளையும் நிறுத்திவிட்டார்.

